தேடுதல்

Centesimus Annus-pro Pontifice அமைப்பு கூட்டத்திற்கு செய்தி

இன்றைய மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களையும், விவகாரங்களையும், கல்விக்கான அவசியத்தையும் அலசி ஆராய்வதற்கு, ஒருங்கிணைந்த சூழலியல் நம்மை வலியுறுத்துகின்றது - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்  

Centesimus Annus-pro Pontifice எனப்படும், கத்தோலிக்க சமுதாயப் போதனைகளை ஊக்குவிக்கும் திருத்தந்தையின் அமைப்பு, அக்டோபர் 23, இவ்வெள்ளியன்று துவக்கியுள்ள உலகளாவிய கூட்டம் ஒன்றிற்கு காணொளிச் செய்தி ஒன்றை, திருப்பீட செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஒன்றோடொன்று தொடர்புடைய, ஒருங்கிணைந்த சூழலியல், மனிதப் பொருளாதாரம் ஆகிய இரு தலைப்புக்களில் தன் சிந்தனைகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், ஒருங்கிணைந்த சூழலியல் என்பது, வாழ்வை ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் நோக்குவதற்கும், முன்னேற்றத்திற்குச் சிறந்த கொள்கைகளைச் சுட்டிக்காட்டி, ஆய்வுகளை மேற்கொண்டு வளர்ப்பதற்கும் இட்டுச்செல்வதாகும் என்று கூறியுள்ளார். 

உலகைப் பற்றிய புதிய கண்ணோட்டத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய விவகாரங்களையும், இன்றைய மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களையும், கல்விக்கான அவசியத்தையும் அலசி ஆராய்வதற்கு, ஒருங்கிணைந்த சூழலியல் நம்மை வலியுறுத்துகின்றது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

மனிதப் பொருளாதாரத்தின் மூன்று கூறுகள் பற்றியும் விளக்கிக் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும்போது, மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும் என்றும், பொருளாதார அமைப்பு, நமது உலகை அழிக்கக் கூடாது, மாறாக, முன்னேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மனிதப் பொருளாதாரம், தொழில் நடவடிக்கைகள், ஓர் உன்னத அழைப்பு என்பதையும், செல்வத்தை உற்பத்தி செய்து, நம் உலகை முன்னேற்ற வழிநடத்துகின்றது என்பதையும் நினைவுபடுத்துகிறது என்றும் காணொளிச் செய்தியில் கூறியுள்ள திருப்பீட செயலர்,  கடவுள் நம் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொண்டு, அதேநேரம் அவற்றை மற்றவருக்குப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறார் என்றும் கூறினார்.

"மனிதப் பொருளாதாரத்திற்கு, ஒருங்கிணைந்த சூழலியலின் மைல்கற்கள்" என்ற தலைப்பில், இந்த உலகளாவிய  கூட்டம் அக்டோபர் 30ம் தேதி முடிய நடைபெறுகிறது.

Centesimus Annus - pro Pontifice எனப்படும் பொதுநிலையினர் அமைப்பு, கத்தோலிக்க சமுதாயப் போதனைகளை, குறிப்பாக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட, நூறாவது ஆண்டு என்ற திருமடலின் போதனைகளை ஊக்குவித்து வருகிறது. திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1993ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, இந்த அமைப்பை உருவாக்கினார்.

23 October 2020, 16:24