அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அணு ஆயுதத் தடைஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள், அதில் கையெழுத்திடவும், அதில் கையெழுத்திட்டு, நடைமுறைப்படுத்தாத நாடுகள், அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என்று திருப்பீடம், இவ்வெள்ளியன்று, ஐ.நா.வில் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்டோபர் 02, இவ்வெள்ளியன்று, ஐ.நா. தலைமையகத்தில், அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலகநாள் நினைவுகூரப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய, பன்னாட்டு உறவுகள் துறையின் திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், அணு ஆயுதத் தடை ஒப்பந்தம், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், ஆயுதப்பரவல் தடைஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு அர்ப்பணித்திருக்கும் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான சாதனம் என்று குறிப்பிட்டார்.
இந்த 2020ம் ஆண்டில், கோவிட்-19 கொள்ளைநோய், அதிகரித்துவரும் உலகளாவிய வெப்பம் ஆகியவை, அணு ஆயுதப்போரின் அச்சுறுத்தலை நெருங்கிவருகிறோம் என்பதை, தாழ்மையோடு ஏற்பதற்கு நம்மைத் தூண்டவேண்டும் என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், உலக அளவில் இந்த ஆயுதங்களைக் குறைப்பது மற்றும், அவற்றை முற்றிலும் ஒழிப்பது, நம் பொதுவான பணியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தை அழிவினின்று பாதுகாப்பதற்கும், பசி, வறுமை, நலவாழ்வு பற்றாக்குறை, மற்றும், கல்வி வசதியின்மை ஆகியவற்றை அகற்றுவதற்கும், உலகின் வளங்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.
20ம் நூற்றாண்டில் கருத்தியலால் தூண்டப்பட்ட தொழில்நுட்பம், விவரிக்கமுடியாத இறப்புக்களையும் பேரழிவுகளையும் கொணர்ந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் கூறியதை நினைவுபடுத்திய பேராயர் காலகர் அவர்கள், இதேமாதிரியான அழிவுகளினின்று நம் வருங்காலத் தலைமுறைகளைப் பாதுகாப்பதற்கு, உலக நாடுகளுக்கு, இதுவே நல்லநேரம் என்று கூறினார்.