தேடுதல்

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதி, பேராயர் காச்சா ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதி, பேராயர் காச்சா 

குழந்தைகளுக்கு, உணவு பெறும் வாய்ப்பும் மூடப்பட்டுள்ளது

சக்திமிகுந்த உணவை உற்பத்தி செய்வதைவிடுத்து, நலமான, அதே வேளையில், விலைகுறைவான உணவு, அனைவருக்கும் கிடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் - திருப்பீடத்தின் பிரதிநிதி, பேராயர் காச்சா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பசியை ஒழிப்பது, உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, ஊட்டச்சத்து முறைகளை திட்டமிடுவது மற்றும், நீடித்து நிலைக்கும் வேளாண்மையை முன்னேற்றுவது ஆகியவை, நம் முக்கிய இலக்குகளாக இருக்கவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. நிறுவனத்தில் வழங்கிய உரையில் கூறினார்.

நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் 75வது அமர்வுக் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் பேராயர் காப்ரியேலே காச்சா (Gabriele Caccia) அவர்கள் வழங்கிய உரையில், பட்டினிக்கும், வறுமைக்கும் இடையே உள்ள இணைப்பை வெளிச்சமிட்டுக் காட்டினார்.

உலகெங்கும், பல இலட்சம் மக்கள், பசியின் கொடுமையில் வாடும் வேளையில், டன் கணக்கில் உணவு தூக்கியெறியப்படுவதும் நடைபெறுகிறது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் காச்சா அவர்கள், இந்த அநீதியான நிலையால், உலக மக்களில் ஒன்பதில் ஒருவர், ஒவ்வொருநாளும் உணவு கிடைக்காமல் உறங்கச் செல்கிறார் என்பதைக் குறிப்பிட்டார்.

சக்திமிகுந்த உணவை உருவாக்குவதன் வழியே, உலகில் பலருக்கு எடைகூடுதல் பிரச்சனையும் உருவாகிறது என்பதை தன் உரையில் எடுத்துரைத்த பேராயர் காச்சா அவர்கள், சக்திமிகுந்த உணவை உற்பத்தி செய்வதைவிடுத்து, நலமான, அதே வேளையில், விலைகுறைவான உணவு, அனைவருக்கும் கிடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவிட் 19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பல கோடி குழந்தைகளுக்கு, உணவு பெறும் வாய்ப்பும் மூடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் காச்சா அவர்கள், மனிதர்களை, குறிப்பாக குழந்தைகளை மையப்படுத்திய முன்னேற்ற திட்டங்களை ஒவ்வொரு நாடும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மேலும், விண்வெளியைப் பயன்படுத்துவதை மையப்படுத்தி நடைபெற்ற மற்றொரு அமர்வில் பேராயர் காச்சா அவர்கள் வழங்கிய உரையில், விண்வெளியை, அமைதிக்காக மட்டுமே பயன்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

புனித பூமியில் பாலஸ்தீனியர்கள் அடைந்து வரும் துயரங்களை ஐ.நா. பொது அவையில் நினைவுகூர்ந்து பேசிய பேராயர் காச்சா அவர்கள், தாங்கள் பிறந்ததுமுதல், கடந்த பல ஆண்டுகளாக மோதல்களையும் தாக்குதல்களையும் மட்டுமே கண்டுவரும் குழந்தைகளையும், இளையோரையும் மனதில்கொண்டு, அப்பகுதியில் நிலையான அமைதி நிலவ, உலக சமுதாயம் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

19 October 2020, 14:40