தேடுதல்

நவம்பர் மாதம் கடைபிடிக்கப்படும் இறந்தோரின் நினைவு நவம்பர் மாதம் கடைபிடிக்கப்படும் இறந்தோரின் நினைவு 

கோவிட்-19ஆல் நவம்பர் மாதம் முழுவதும் பரிபூரண பலன்

வயது முதிர்ந்தோர், நோயாளிகள், மற்றும், கடுமையான காரணங்களால் கல்லறைகளைச் சந்திக்க இயலாதவர்கள், பரிபூரண பலன்களைப் பெறுவதற்குரிய விதிமுறைகளை தங்களின் இடங்களில் இருந்துகொண்டே நிறைவேற்றினால், பரிபூரண பலன்களைப் பெறலாம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறந்தோருக்கென நவம்பர் மாதத்தின் குறிப்பிட்ட நாள்களில் வழங்கப்பட்டுவந்த பரிபூரண பலன்கள், தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோயால், இவ்வாண்டு, நவம்பர் மாதம் முழுவதும் வழங்கப்படும் என்று, Apostolic Penitentiary எனப்படும், திருப்பீட மனச்சாட்சி பேராயம் அறிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் வழங்கப்படும் பரிபூரண பலன்கள் பற்றி, அக்டோபர் 23, இவ்வெள்ளியன்று விதிமுறைகளை வெளியிட்ட, திருப்பீட மனச்சாட்சி பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு ஆணையின்படி, இவ்வாண்டு நவம்பர் மாதப் பரிபூரண பலன்கள் பற்றி, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கல்லறைகளை நேரடியாகவும், மனத்தளவிலும் சந்தித்து, இறந்தோருக்காகச் செபிக்கும் அனைவருக்கும், பொதுவாக, நவம்பர் முதல் தேதியிலிருந்து, எட்டாம் தேதி வரை வழங்கப்படும் பரிபூரண பலன்கள், தற்போதைய கொள்ளைநோயால், வருகிற நவம்பர் மாதம் முழுவதும் வழங்கப்படுகின்றன என்று, கர்தினால் Piacenza அவர்கள் அறிவித்துள்ளார்.

வயது முதிர்ந்தோர், நோயாளிகள், மற்றும், கடுமையான காரணங்களால் கல்லறைகளைச் சந்திக்க இயலாதவர்கள், பரிபூரண பலன்களைப் பெறுவதற்குரிய விதிமுறைகளை தங்களின் இடங்களில் இருந்துகொண்டே நிறைவேற்றி, ஆன்மீக அளவில் மற்ற விசுவாசிகளோடு இணைந்தால், இந்தப் பலன்களைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இறையருளை எளிதாகப் பெறுவதற்கு உதவும் வகையில், அருள்பணியாளர்கள், மனத்தாராளத்துடன், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றி, நற்கருணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் Piacenza அவர்கள், இறந்தோர் நினைவு நாளான நவம்பர் 2ம் தேதி, அருள்பணியாளர்கள் மூன்று திருப்பலிகளை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

23 October 2020, 14:30