தேடுதல்

Vatican News
கோவிட்-19 சூழலில் கல்வி கோவிட்-19 சூழலில் கல்வி  (AFP or licensors)

கோவிட்-19: கத்தோலிக்க பள்ளிகளுக்கு நிச்சயமற்ற சூழல்

உலகிலுள்ள அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும், கல்வி நிறுவனங்களுக்கென, கத்தோலிக்க கல்வி பேராயம் வெளியிட்டுள்ள மடலில், அப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Versaldi அவர்களும், அதன் செயலர், பேராயர் Zani அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காரணமாக, உலகெங்கும் கத்தோலிக்கப் பள்ளிகள், ஒரு நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்கின்றன என்று, கத்தோலிக்க கல்வி பேராயம், இவ்வியாழனன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 10, இவ்வியாழனன்று, உலகிலுள்ள அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும், கல்வி நிறுவனங்களுக்கென, கத்தோலிக்க கல்வி பேராயம் வெளியிட்டுள்ள ஒரு மடலில், கத்தோலிக்கப் பள்ளிகள், அரசின் ஆதரவின்றி மூடப்படும் அல்லது, ஆசிரியர்களைக் குறைக்கும் நிலைக்கு உள்ளாகியிருக்கிறது என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கல்வி பேராயத்தின் தலைவர் கர்தினால் Giuseppe Versaldi அவர்களும், அதன் செயலர் பேராயர் Angelo Vincenzo Zani அவர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இந்த மடலில், கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், நாடெங்கும் டிஜிட்டல்முறை கல்வி கற்றல் ஊக்குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக அளவில் சிறார் மத்தியில், கல்வி மற்றும், தொழில்நுட்ப வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு அமைப்புகள், அண்மையில் வெளியிட்ட சில புள்ளிவிவரங்களின்படி, வருகிற ஆண்டுகளில், ஏறத்தாழ ஒரு கோடிச் சிறார் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழப்பார்கள் எனவும், இந்நிலை, கல்வியில், ஏற்கனவே நிலவும் இடைவெளியை அதிகரிக்கும் எனவும், அம்மடலில் கூறியுள்ள அத்தலைவர்கள், தற்போதைய நெருக்கடி சூழலை கத்தோலிக்க  நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முறையைப் பாராட்டியுள்ளனர்.    

இணையவழி கல்வி முறை, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய நேரடித் தொடர்பை, எந்தவிதத்திலும் ஈடுகட்டாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள கத்தோலிக்க கல்வி பேராயம், கொரோனா கொள்ளைநோய் முன்வைத்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு, கத்தோலிக்க ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா கொள்ளைநோய், மக்களின் நலவாழ்வில் உருவாக்கியிருக்கும் அவசரகால நெருக்கடிகளையும் தவிர்த்து, கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும், பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள், தங்களின் மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வி கற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை, கத்தோலிக்க கல்வி பேராயம் ஊக்குவித்துள்ளது.   

11 September 2020, 13:44