தேடுதல்

கர்தினால் மைக்கிள் செர்னி கர்தினால் மைக்கிள் செர்னி  

நாட்டுக்குள்ளே புலம்பெயர்வோரை நினைவுகூர அழைப்பு

நாட்டிற்குள்ளேயே தங்கள் உறைவிடங்களைவிட்டு பெயர்ந்துவாழும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவோரை, இவ்வாண்டு சிறப்பாக நினைவுக்கூரும் வேளையில், கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கத்தால், தங்கள் எதிர்காலத்தைக் குறித்த பாதுகாப்பை இழந்துள்ள அனைவரையும் நாம் இவ்வாண்டு சிந்திப்போம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு நெருக்கடிகளால் நாடுவிட்டு நாடு செல்லும் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோரைப் போலவே, ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் தங்கள் இடங்களைவிட்டு பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவோரை இவ்வாண்டு சிறப்பாக நினைவுகூர்வதற்கு திருத்தந்தை அழைக்கிறார் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணிக்கென திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறையின் பொறுப்பாளராகப் பணியாற்றும் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், செப்டம்பர் 23, இப்புதனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இவ்வாறு கூறினார்.

செப்டம்பர் 27 வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 106வது புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் உலகநாளையொட்டி, புலம்பெயந்தோர் பணிக்கென இயேசு சபையினரால் உருவாக்கப்பட்டுள்ள JRS எனப்படும் பணிக்குழுவும், துறவு சபைகளின் உலகத்தலைவர்களின் கூட்டமைப்பான UISGயும் இணைந்து, செப்டம்பர் 23ம் தேதி கருத்தரங்கு ஒன்றை நடத்தின.

நாட்டிற்குள்ளேயே தங்கள் உறைவிடங்களைவிட்டு பெயர்ந்துவாழும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவோரை, இவ்வாண்டு சிறப்பாக நினைவுக்கூரும் வேளையில், கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கத்தால், தங்கள் எதிர்காலத்தைக் குறித்த பாதுகாப்பை இழந்துள்ள அனைவரையும் நாம் இவ்வாண்டு சிந்திப்போம் என்று, திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை, கர்தினால் செர்னி அவர்கள் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலகநாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டு வழங்கிய செய்தியில், வரவேற்பது, காப்பது, வளர்ப்பது, ஒருங்கிணைப்பது என்ற நான்கு செயல்பாட்டு சொற்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, இவ்வாண்டு வழங்கிய செய்தியில் கூடுதலாக ஆறு ஜோடி செயல்பாட்டு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை கர்தினால் செர்னி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

புரிந்துகொள்வதற்காக தெரிந்துகொள்ளுதல், பணியாற்றுவதற்காக நெருங்கிச்செல்லுதல், செவிமடுப்பதற்காக ஒப்புரவாதல், வளர்வதற்காக பகிர்தல், வளர்த்தெடுப்பதற்காக ஈடுபடுதல், கட்டியெழுப்புவதற்காக கூட்டுறவு கொள்ளுதல் என்று திருத்தந்தை பயன்படுத்தியுள்ள ஆறு ஜோடி செயல்பாட்டு சொற்களை, கர்தினால் செர்னி அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

நாட்டுக்குள்ளேயே இடம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டோருக்கு, JRS மற்றும் UISG ஆகிய அமைப்புக்கள் வழியே, ஆற்றப்படும் பணிகளை தொகுத்து வழங்கும் ஒரு காணொளியை, கர்தினால் செர்னி அவர்கள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றோருக்கு காண்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2020, 14:16