தேடுதல்

Vatican News
திருத்தந்தையர் குறித்த அருங்காட்சியகத்திலிருந்து திருத்தந்தையர் குறித்த அருங்காட்சியகத்திலிருந்து  (ANSA)

திருத்தந்தையர் வரலாறு - இரண்டாவது 5 திருத்தந்தையர்

யூதர்கள், இயேசுவைக் கொன்றவர்கள், எனவே, கிறிஸ்தவர்களின் விரோதிகள், என்ற தவறான பகைமைப்போக்கு நிலவிவந்த காலத்தில், யூதர்களை திருஅவைக்குள் வரவேற்ற திருத்தந்தை முதலாம் பயஸ்.

கிறிஸ்டாபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருஅவையின் முதல் ஐந்து  திருத்தந்தையரைப்போலவே, அதற்கடுத்துவந்த 5 திருத்தந்தையரும் புனிதர்களாகத் திகழ்ந்தனர். புனித முதலாம் அலெக்ஸ்சாந்தர் (Alexander I 105-115), முதலாம் சிக்ஸ்துஸ் (Sixtus I 115-125), தெலஸ்ஃபோருஸ் (Telesphorus 125-136), ஹைஜீனுஸ் (Hyginus 136-140), முதலாம் பயஸ் (Pius I 140-155) ஆகிய திருத்தந்தையரைக் குறித்து சுருக்கமாக நோக்குவோம்.

திருஅவையில் 6ம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றவர், புனித முதலாம் அலெக்ஸாண்டர். இவர் 105 முதல் 115 வரை, 10 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்தினார். இவரது பணிக்காலம், 7 முதல் 10 ஆண்டுகள் என்ற தகவல்களும் உள்ளன. இவரைப்பற்றிய அதிகமான குறிப்புகள் எதுவும் திருப்பீட ஏடுகளில் இல்லை. இருப்பினும், காலம் காலமாக இவரைப்பற்றி கூறப்படும் செய்திகள் என்னவெனில், இவர் சிறைப்பட்டிருந்தபோது, இவரின் சிறைக்காவலர் Quirinus அவர்களையும் அவரது மகள் Balbina அவர்களையும் திருமறைக்கு மனம்திருப்பினார் என்பது. உரோம் ஆளுநர் Hermes அவர்களையும் அவருடன் தொடர்புடைய 1500 பேரையும் இத்திருத்தந்தை, கிறிஸ்தவ மறைக்கு மனம் திருப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இயேசுவின் இறுதி இரவு உணவில் நிகழ்ந்தவற்றை, மீண்டும், திருப்பலிகளில் நினைவுகூரும் பழக்கத்தையும், வீடுகளை, உப்பும் நீரும் தெளித்து ஆசிர்வதிக்கும் பழக்கத்தையும், இவரே புகுத்தியதாக நம்பப்படுகிறது. ஆனால், இதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து, திருத்தந்தையாக வந்தவர், புனித முதலாம் Sixtus. புனித பேதுருவுக்குப்பின் வந்த ஆறாவது  திருத்தந்தை இவர் என்பதால், இலத்தீனில் 6 என்ற எண்ணைக் குறிக்க பயன்படுத்தப்படும் Sextus என்று சொல் இவரது பெயராக மாறியிருக்கலாம் என்று நம்பியதுண்டு. ஆனால், ‘இக்ஸ்துஸ்’ என்பதே இவரின் உண்மை பெயராக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மன்னர் Adrian ஆட்சிகாலத்தில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திசென்று, மறைசாட்சியாய் உயிரிழந்து புனித பேதுருவின் கல்லறைக்கு அருகே புதைக்கப்பட்டார், இத்திருத்தந்தை. இவரின் புனிதப் பொருள்களில் ஒரு பகுதி, திருத்தந்தை 10ம் கிளமெண்ட் அவர்களால், கர்தினால் de Retz அவர்களுக்கு வழங்கப்பட, அது, பிரான்ஸ் நாட்டின் வடகிழக்கிலுள்ள Lorraine நகரின் புனித மிக்கேல் துறவு இல்லத்தில் வைக்கப்பட்டது.

திருத்தந்தையர்கள் கொலைசெய்யப்பட்டது குறித்து நாம் இதுவரை பேசிவந்தாலும் புனித பேதுருவுக்குப்பின் மறைசாட்சியாக கொல்லப்பட்டது குறித்த வலுவான ஆதாரங்கள் இருப்பது, திருஅவையின் எட்டாவது திருத்தந்தையான புனித Telesphorus அவர்களுக்கே. 125 முதல் 136 வரை திருஅவையை வழிநடத்திய இத்திருத்தந்தையின் காலத்தில்தான், கிறிஸ்மஸ் நடு இரவு திருப்பலி, ஞாயிறுக்கிழமைகளில் மட்டுமே உயிர்ப்பு விழா கொண்டாட்டம், 7 வார தவக்காலம், கிறிஸ்மஸ் திருப்பலியில் வானதூதரின் பாடல் பாடும் வழக்கம், போன்றவை துவக்கப்பட்டதாக பாரம்பரியம் கூறுகிறது.

திருத்தந்தை புனித Hyginus அவர்களின் காலத்தில் மத விரோத கொள்கைகள் தீவிரமாக தலைதூக்கத் துவங்கின. பழைய ஏற்பாட்டின் கடவுள் குறித்தும், இயேசு மனிதனாகப் பிறப்பெடுத்தது குறித்தும், சில இறைவல்லுநர்கள் கேள்வி எழுப்பினர். மிக இளமையாக இருந்த திருஅவை, முதலில் தடுமாறினாலும், திருத்தந்தை Hyginus அவர்களின் திறமையாலும் தேர்ந்த அறிவாலும், இறைவழி நடத்தலாலும், விசுவாசத்தை பாதுகாக்க முடிந்தது. இவர் 4 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்றுள்ளார் (136 - 140, அல்லது 138 - 142).

திருஅவையின் 10வது திருத்தந்தையான முதலாம் பயஸ் அவர்கள், 140ம் ஆண்டு முதல் 155(154)ம்  ஆண்டுவரை  திருஅவையை வழிநடத்தினார். இவர் காலத்திலும் கடவுளுக்கு எதிரான கொள்கைகள் உரோம் விசுவாசிகளிடையே தீவிரமாகப் பரப்பப்பட்டன. திருமறைக்கு எதிரான கருத்துக்கள் Cerdon, Valentinus, Marcion ஆகியோரால், மக்களிடையே மிகத் தீவிரமாக பரப்பப்பட்டன. திருஅவைக்கு எதிரான கொள்கைகளை பலமுடன் எதிர்த்ததோடு அக்கொள்கைகளை பரப்பிவந்த Marcion என்ற மெய்யியலாளரை திருஅவையிலிருந்து விலக்கியும் வைத்தார் இத்திருத்தந்தை. யூதர்கள், இயேசுவைக் கொன்றவர்கள், எனவே, கிறிஸ்தவர்களின் விரோதிகள், என்ற தவறான பகைமைப்போக்கு நிலவிவந்த காலத்தில், யூதர்களை திருஅவைக்குள் வரவேற்றவர், புனித திருத்தந்தை முதலாம் பயஸ் என கூறப்படுகிறது.

திருஅவையின் ஒன்பதாவது, பத்தாவது திருத்தந்தையர்களின் காலத்தில் துளிர்விட ஆரம்பித்த தவறானக் கொள்கைகள், எவ்வாறு வளர்ந்து வேர்விடத் துவங்கின, திருத்தந்தையர் எத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியுயிருந்தது என்பது குறித்து, திருத்தந்தையர் வரலாறு – முரண்பாட்டு படிப்பினைகளின் துவக்கம் என்ற தலைப்பில் அடுத்த வாரம் காண்போம்.

09 September 2020, 14:01