தேடுதல்

Vatican News
பெலாருஸ் நாட்டில்  பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பெலாருஸ் நாட்டில் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  

பெலாருஸ் மக்களுடன் திருத்தந்தையின் அருகாமை

செப்டம்பர் 11, இவ்வெள்ளியன்று, திருத்தந்தையின் பிரதிநிதியாக, பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் காலகர் அவர்கள், பெலாருஸ் தலைநகர் மின்ஸ்க் நகருக்குச் சென்றுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், அந்நாட்டின் நீண்டகால அரசுத்தலைவர் Lukashenko அவர்கள் வெற்றிபெற்றுள்ளார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டில் பல வாரங்களாக எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும்வேளையில், அந்நாட்டு மக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அருகாமையை வெளிப்படுத்துவதற்காக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் அந்நாடு சென்றுள்ளார்.

செப்டம்பர் 11, இவ்வெள்ளியன்று, திருத்தந்தையின் பிரதிநிதியாக, பெலாருஸ் தலைநகர் மின்ஸ்க் நகருக்குச் சென்றுள்ள, பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர்களைச் சந்திப்பார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

தன் உறவினர் ஒருவருக்கு, திருநற்கருணை அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்காக, போலந்து நாடு சென்றிருந்த மின்ஸ்க் பேராயர் Tadeusz Kondrusiewicz அவர்கள், பெலாருஸ் நாட்டில் நுழைவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தையின் விண்ணப்பம்

பெலாருஸ் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும், சமுதாய எதார்த்த நிலைகள் மீது கவனம் செலுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மாதம் 16ம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், அந்நாட்டு மக்கள் அனைவரையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபித்தார்.

பெலாருசில் நடைபெற்ற தேர்தலுக்குப்பின், அந்நாட்டின் நிலவரம் குறித்து தான் மிக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வன்முறையைப் புறக்கணித்து, நீதி மற்றும் உரிமைகளை மதித்து, உரையாடல் வழியாக, பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறும், மூவேளை செப உரையில், திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

மேலும், அந்நாட்டில் நிலைமை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 18ம் தேதி, ஐரோப்பிய ஆயர்களின், நீதி மற்றும், அமைதி அவையின் உயர்மட்ட குழுவும், அந்நாட்டில் உண்மை, நீதி மற்றும், அமைதி மேலோங்கி நிற்கவேண்டும் என்பதற்காக, இறைத்தந்தையை நோக்கிச் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே, பெலாருசில் இந்த போராட்டங்களை முன்னின்று நடத்தும் எதிர்கட்சித் தலைவர் Maria Kolesnikova அவர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து, போராட்டங்கள் வலுத்துவருகின்றன. பெலாருஸ் நாட்டை ஏறத்தாழ 26 ஆண்டுகளாக ஆட்சிசெய்துவரும் அரசுத்தலைவர், Lukashenko அவர்கள், இத்திங்களன்று, இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்களைச் சந்தித்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

12 September 2020, 13:59