தேடுதல்

குவாத்தமாலா பூர்வீக இன ஆடை குவாத்தமாலா பூர்வீக இன ஆடை 

பூர்வீக இன மக்கள் புறக்கணிக்கப்படக் கூடாது

பூர்வீக இன மக்கள், உலகின் மக்கள் தொகையில் ஆறு விழுக்காடாக மட்டுமே இருப்பதையும் பொருட்படுத்தாது, கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடிகளில் இவர்கள், பாரபட்சத்துடன் நடத்துப்படுகிறார்கள் - பேராயர் யூர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவை, பூர்வீக இன மக்கள் குறித்து   நடத்தும் 45வது இணையவழி கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், அரசியல் மட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றும் நடவடிக்கைகளில், இந்த மக்கள் இணைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு அமைப்புகளில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், 45வது இணையவழி கூட்டத்தில் ஆற்றிய உரையில், தற்போதைய கொள்ளைநோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களின் நெருக்கடிநிலைகள் பற்றி எடுத்துரைத்தார்.

பூர்வீக இன மக்கள், உலகின் மக்கள் தொகையில் ஆறு விழுக்காடாக மட்டுமே இருப்பதையும் பொருட்படுத்தாது, கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடிகளில் இவர்கள், பாரபட்சத்துடன் நடத்துப்படுகிறார்கள் மற்றும், மிகவும் துன்புறுகிறார்கள் என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் கூறினார். 

திருப்பீடம், பலநேரங்களில் புறக்கணிக்கப்படும் இம்மக்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது மற்றும், இவர்களோடு தோழமையுணர்வு கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், உலகின் பல பகுதிகளில், பூர்வீக இன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன என்பதையும், செப்டம்பர், 24, இவ்வியாழனன்று ஆற்றிய உரையில் கவலை தெரிவித்தார். 

அரசியல் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில், குறிப்பாக, இம்மக்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்த தீர்மானக் கலந்துரையாடல்களில், இம்மக்களும் பங்குபெறுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், பேராயர் யூர்க்கோவிச்.

26 September 2020, 15:15