தேடுதல்

Vatican News
28வது பொருளாதார மற்றும், சுற்றுச்சூழல் அவையின் கூட்டம் 28வது பொருளாதார மற்றும், சுற்றுச்சூழல் அவையின் கூட்டம் 

ஊழல், அமைதி மற்றும், பாதுகாப்பிற்கு உண்மையான ஆபத்து

ஊழல் விவகாரத்தில், நம் மனச்சான்றைத் தட்டியெழுப்ப துணிவுபெற வேண்டும். ஊழலுக்கு எதிராகப் போராட, குடிமக்கள் பங்கேற்கும் செயல்திட்டங்கள், கல்வி, கலாச்சாரம், பயிற்சி போன்றவை முக்கியம் - செக் குடியரசின் திருப்பீடத் தூதர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பாவில் அமைதி, பாதுகாப்பு, மற்றும், ஒத்துழைப்பிற்கு, ஊழல், உண்மையாகவே அச்சுறுத்தலாக உள்ளது என்று, திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், OSCE எனப்படும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பின், 28வது பொருளாதார மற்றும், சுற்றுச்சூழல் அவையின் இணையவழி கூட்டத்தில் கூறினார்.

செக் குடியரசின் பிராக் நகரில், செப்டம்பர் 11, இவ்வெள்ளியன்று நிறைவுபெற்ற மெய்நிகர் கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக உரையாற்றிய, செக் குடியரசின் திருப்பீடத் தூதர் பேராயர் சார்லஸ் பால்வோ (Charles Balvo) அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், பரவிவரும் ஊழல் குறித்து எடுத்துரைத்தார்.

ஊழல், கோவிட்-19 கொள்ளைநோய்

கோவிட்-19 கொள்ளைநோய் ஒழிப்புக்கெனவும், அந்த நோயாளிகளின் சிகிச்சைக்கெனவும் ஒதுக்கப்பட்ட நிதி, குற்றக்கும்பல்களை ஏற்கனவே கவர்ந்துள்ளது, இதனால், நிதியுதவியை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் மக்கள், தேவையான உடனடி உதவிகள் இன்றி துன்புறுகின்றனர் என்று, பேராயர் பால்வோ அவர்கள் கூறினார்.

OSCE அமைப்பிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றிலும், ஊழல், பல்வேறு நிலைகளில் இடம்பெறுகின்றது என்பதை ஏற்கவேண்டியது மிகவும் முக்கியம் என்றுரைத்த பேராயர் பால்வோ அவர்கள், ஊழல் நிலவுகிறது என்பதை ஏற்றால் மட்டுமே, அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொள்ளைநோய், உலகளாவிய சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக அமைந்துள்ளது என்றும், பிரவினைக்கு இட்டுச்செல்லாத, அரசியல் சாயம் பூசப்படாத, பாரபட்சமற்ற, புதிய, மற்றும், புதுமையான தீர்வுகளைத் தேடுவதற்கு, இப்போதைய காலம், நல்லதொரு உண்மையான வாய்ப்பு என்றும், பேராயர் பால்வோ அவர்கள் கூறினார்.

திருப்பீடம், ஒளிவுமறைவற்றதன்மை

இந்தக் கூறுகளை மனதில் வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, திருப்பீடமும், வத்திக்கான் நகர நாடும் பொதுவான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நடைமுறைகளில், ஒளிவுமறைவற்றதன்மையைக் கைக்கொள்வதற்கு உதவியாக, புதிய நடைமுறை விதிகளை வெளியிட்டார் என்பதையும், பேராயர் பால்வோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருப்பீடம், மற்றும், வத்திக்கான் நகர நாட்டை நிர்வாகம் செய்ய அழைக்கப்படுகிறவர்கள் மத்தியில், ஊழல் என்ற ஆபத்து இடம்பெறுவதைத் தவிர்க்கவே, இந்த விதிமுறைகளை திருத்தந்தை வெளியிட்டார் என்றும், OSCE அமைப்பின் கூட்டத்தில் குறிப்பிட்டார், பேராயர் பால்வோ.

பொதுவான நிர்வாகத்தில், ஒளிவுமறைவற்றதன்மையும், ஒருவர் ஒருவருக்கு கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வும் இல்லாமல்போனால், உறுதியான, மற்றும், நீடித்து நிலைத்து இருக்கும் பொருளாதார முன்னேற்றமும், பாதுகாப்பும் குறைவுபடும் என்றும், பேராயர் பால்வோ அவர்கள் கூறினார்.

ஐரோப்பா, மத்திய ஆசியா, திருப்பீடம் மற்றும், வட அமெரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள, 57 நாடுகள், OSCE அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

11 September 2020, 13:52