தேடுதல்

Vatican News
கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

ஆதாயத்திற்காக கோவிட்- 19 பயன்படுத்தப்படுவதற்கு எதிராய்..

தற்போதைய கொள்ளைநோய், இயேசுவில் நம்பிக்கை வைப்பதன் வழியாக, மக்களை, பரிவன்பும், தோழமையுணர்வும் கொண்ட ஒரு வாழ்வுமுறைக்கு இட்டுச்செல்லும் -கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா கொள்ளைநோயைப் பயன்படுத்தி நிதி சேர்க்கும் போக்கை, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் குறை கூறியுள்ளார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவரும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவருமான, கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டில் நடைபெற்ற, ஓர் இணையவழி நிகழ்வு வழியாக, கோவிட்-19 கொள்ளைநோய் குறித்த சிந்தனைகளை வழங்கியவேளையில், இவ்வாறு குறை கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில், பலர் துன்புறுகின்றனர், மற்றும், பலர், ஏழைகளாகி வருகின்றனர், அதேநேரம், சில தொழில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், தனிநபர்களும், இச்சூழலை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறிய, கர்தினால் தாக்லே அவர்கள், தங்களின் ஆதாயத்திற்காக, மற்றவரின் தேவைகள் மற்றும், துன்பங்கள் மீது எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதை, இவர்கள் அறிந்து வைத்துள்ளனர் என்றும் கூறினார்.

தற்போதைய கொள்ளைநோய், இயேசுவில் நம்பிக்கை வைப்பதன் வழியாக, மக்களை, பரிவன்பும், தோழமையுணர்வும் கொண்ட ஒரு வாழ்வுமுறைக்கு இட்டுச்செல்லும் என்று  தான் நம்புவதாகத் தெரிவித்த கர்தினால் தாக்லே அவர்கள், தற்போது உலக அளவில் நிலவும் நலவாழ்வு நெருக்கடியை எதிர்கொள்ள, காரித்தாசின் உதவி, நூறு விழுக்காட்டிற்கும் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் எவருமே ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், இவ்வாறு செயல்படுகையில், அது பலரில் நம்பிக்கையை உருவாக்கும் என்றும், திருப்பீட உயர் அதிகாரியான, கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பும், Dilaab அறக்கட்டளையும் இணைந்து, செப்டம்பர் 08, இச்செவ்வாயன்று, “சற்று ஓய்வு (Kaunting Pahinga)” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த இணையவழி கூட்டத்தில், பிலிப்பீன்ஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட, கர்தினால் தாக்லே அவர்கள், இவ்வாறு தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இதற்கிடையே, செப்டம்பர் 10, இவ்வியாழனன்று பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா சென்ற கர்தினால் தாக்லே அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபின், அந்நோய்க் கிருமி தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், செப்டம்பர் 11, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார். 

கர்தினால் தாக்லே அவர்கள், செப்டம்பர் 7, இத்திங்களன்று உரோம் நகரிலிருந்து புறப்படுவதற்குமுன் மேற்கொண்ட, கொரோனா தொற்றுக்கிருமி பரிசோதனையில், அக்கிருமியின் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டதையும், புரூனி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

12 September 2020, 13:56