தேடுதல்

Vatican News
கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

அன்னை தெரேசா பற்றி கர்தினால் தாக்லே

பிறரன்பு, சமுதாய ஒருங்கமைவையும், அமைதியையும் கட்டியெழுப்புகின்றது. உண்மையான பிறரன்புச் செயல்கள், பிறரன்பு கொண்ட மனிதரிடமிருந்து மட்டுமே வரமுடியும் - கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வறியோரிலும் மிக வறியோருக்குப் பணியாற்றுவதற்கு, தன்னை முழுவதையும்  அர்ப்பணித்திருந்த புனித அன்னை தெரேசா அவர்களின் வாழ்வுமுறை, உலகம் முழுவதும், மத வேறுபாடின்றி, அனைத்து மக்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று கொல்கத்தா புனித அன்னை தெரேசாவின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், அன்னை தெரேசா அவர்கள், இறைவனடி சேர்ந்த செப்டம்பர் 5ம் தேதியை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், பிறரன்பு உலக நாளாக அறிவித்திருப்பதே, இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

பிறரன்பு உலக நாள், கத்தோலிக்கத் திருஅவைக்கும் மிகவும் முக்கியம் என்பதை விளக்கிய கர்தினால் தாக்லே அவர்கள், “வறியோரின் அன்னை”யான, அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டான பிறரன்பு வாழ்வுமுறை, கோவிட்-19 கொள்ளைநோயை எதிர்கொள்வதற்கு நமக்கு எவ்வாறு உதவுகின்றது என்பதுபற்றிய தன் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டார்.

புனித அன்னை தெரேசா, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பாதுகாவலர்களில் ஒருவர் எனவும், 1950ம் ஆண்டில் இந்த அன்னை ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர் சபை வழியாக, அந்த அன்னையின் பிறரன்புப் பணிகள், உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளது எனவும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவரான, கர்தினால் லூயிஸ் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்,.

பிறரன்பு, அமைதியைக் கட்டியெழுப்புகின்றது

பிறரன்பு, சமுதாய ஒருங்கமைவையும், அமைதியையும் கட்டியெழுப்புகின்றது என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், உண்மையான பிறரன்புச் செயல்கள், பிறரன்பு கொண்ட மனிதரிடமிருந்து மட்டுமே வரமுடியும் என்றும் கூறினார்.

இவ்வுலகில், ஒவ்வொரு மனிதரும், கடவுளின் அன்பின் முகமாக விளங்கவே, அவரது சாயலில் படைக்கப்பட்டுள்ளனர் என்றும், அன்னை தெரேசா, கடவுளின் அன்பு,  ஏழைகளில் ஒளிர, ஒரு கருவியாக இருந்தார் என்றும், கர்தினால் தாக்லே அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

05 September 2020, 14:02