தேடுதல்

Vatican News
பெய்ரூட் புனித ஜார்ஜ் பேராலயத்தில் கர்தினால் பரோலின் பெய்ரூட் புனித ஜார்ஜ் பேராலயத்தில் கர்தினால் பரோலின்   (ANSA)

லெபனான் மக்களே, நீங்கள் தனியாக இல்லை

லெபனான் நாட்டை, தனியே விட்டுவிடாதீர்கள், லெபனானுக்கு உலக சமுதாயம் தேவைப்படுகின்றது, அதேநேரம், தோழமையிலும், சுதந்திரத்திலும், பன்மைத்தன்மையிலும் வாழவேண்டிய தேவை, உலகிற்கும் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டு தலைநகர் பெய்ரூட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற கொடூரமான வெடிவிபத்தால் துயருறும், மக்களுடன் கத்தோலிக்கத் திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வை நேரிடையாகத் தெரிவிப்பதற்காக, அந்நாடு சென்றுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

செப்டம்பர் 03, இவ்வியாழனன்று, பெய்ரூட் நகரின் புனித ஜார்ஜ் மாரனைட் வழிபாட்டுமுறை பேராலயத்தில், அந்நாட்டின் பல்சமயத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 4, இவ்வெள்ளியை, லெபனான் நாட்டிற்காக, உண்ணாநோன்பு மற்றும் இறைவேண்டல் நாளாக கடைப்பிடிக்குமாறு அழைப்புவிடுத்த பின்னர், திருஅவையின் அருகாமையைத் தெரிவிக்கும்வண்ணம், தன்னை அந்நாட்டிற்கு அனுப்பிவைத்தார் என்று கூறினார்.

தனது வாழ்வும், தான் அன்புகூரும் மற்றவரின் வாழ்வும், எந்நேரத்திலும் பறிக்கப்படலாம் என்ற அச்சம் நிறைந்த சூழலில் யாராலும் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், லெபனான் மக்களே, நீங்கள் தனியாக இல்லை, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை உங்களோடு இருக்கின்றது என்று கூறினார்.

கடமையுணர்வு, ஒளிவுமறைவற்றநிலை, நம்பகத்தன்மை ஆகியவற்றைக்கொண்ட சிறந்த நிர்வாகத்தை அமைக்க முயற்சிப்பதற்கும், அனைவரும் அமைதியிலும் மாண்புடனும் ஒன்றிணைந்து வாழ சக்திபெறவும், எண்ணங்களைத் தூய்மைப்படுத்தவும், நம் துன்பங்கள் நமக்கு உதவிசெய்கின்றன என்று, கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

அடிப்படை உரிமைகள் மற்றும், கடமைகளை மதிப்பதை அடிப்படையாக வைத்து, அனைத்து குடிமக்களையும் சமுதாயத்தில் ஈடுபடுத்துவதை ஊக்குவிப்பதன் வழியாக, நாம் எல்லாரும் இணைந்து, வன்முறை, மற்றும், அனைத்துவிதமான சர்வாதிகாரப்போக்குகளைத் தோற்கடிக்க இயலும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

லெபனானின் தனித்துவம்

புனித பூமியின் ஒரு பகுதியாக இருக்கின்ற லெபனான் நாட்டின் தனித்துவமிக்க மதிப்பையும் எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்த கடுந்துயர் நிறைந்த காலக்கட்டத்தில், யாரையும் கைவிடாமல் இருப்பதும், குடிமக்களில், குறிப்பாக, நலிவடைந்த மக்களில், நம்பிக்கையை ஊட்டவேண்டியதும், சமயத் தலைவர்களின் கடமை என்பதையும் குறிப்பிட்டார்.

பெய்ரூட் முழுவதும் வாழ்ந்து காட்டப்படும் அழகான தோழமையுணர்வு, நம் எதிர்நோக்கு மற்றும், வருங்கால செயல்களை வலுப்படுத்த உதவியாக இருக்கும் என்றும், தன் உரையில் குறிப்பிட்டார், கர்தினால் பரோலின்.  

லெபனான் நாட்டை, தனியே விட்டுவிடாதீர்கள், லெபனானுக்கு உலக சமுதாயம் தேவைப்படுகின்றது, அதேநேரம், தோழமையிலும், சுதந்திரத்திலும், பன்மைத்தன்மையிலும் வாழவேண்டிய தேவை, உலகிற்கும் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக சமுதாயத்திற்கு விடுத்த அழைப்பை, இந்நேரத்தில் மீண்டும் கூறுகிறேன் என்று சொல்லி, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையை நிறைவு செய்தார்

கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி, பெய்ரூட் துறைமுகக் கிடங்கில், ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த, 2,750 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் மருந்து திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 220 பேர் கொல்லப்பட்டனர், ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர், மற்றும், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

04 September 2020, 12:24