தேடுதல்

செயற்கை நுண்ணறிவு குறித்த அடையாளம் செயற்கை நுண்ணறிவு குறித்த அடையாளம் 

"செயற்கை நுண்ணறிவு, அனைவருக்கும் உணவு" – கருத்தரங்கு

FAO, IBM, மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன், திருப்பீடம் மேற்கொண்டுவரும் உரையாடல் வழியே, மனிதர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வழிகளைக் கண்டறிய விழைகிறது - பேராயர் பாலியா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வை வலியுறுத்தும் நோக்கத்துடன், திருப்பீடத்தில் இயங்கிவரும் பாப்பிறை வாழ்வு கலைக்கழகம், செப்டம்பர் 24, இவ்வியாழனன்று, செயற்கை அறிவுத்திறனை மையப்படுத்தி, இணையவழி கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

"செயற்கை நுண்ணறிவு, அனைவருக்கும் உணவு" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கை, பாப்பிறை வாழ்வு கலைக்கழகத்துடன், FAO எனப்படும் உணவு வேளாண்மை, IBM எனப்படும் பன்னாட்டு வர்த்தகக் கருவிகள், மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

இந்தக் கருத்தரங்கைக் குறித்து, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த பாப்பிறை வாழ்வு கலைக்கழகத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், டிஜிட்டல் உலகை நிரப்பி வரும் தொழில்நுட்பங்கள், இறைவன் மனிதருக்கு வழங்கியுள்ள கொடைகள் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

FAO, IBM, மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன், திருப்பீடத்தின் சார்பில், பாப்பிறை வாழ்வு கலைக்கழகம், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நிறைவேற்றிய ஓர் ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்த பேராயர் பாலியா அவர்கள், மனித குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பத்திலும், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிலும் பெருமளவு ஈடுபட்டுள்ள FAO, IBM, மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன், திருப்பீடம் மேற்கொண்டுவரும் உரையாடல் வழியே, மனிதர்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வழிகளைக் கண்டறிய விழைகிறது என்று பேராயர் பாலியா அவர்கள் கூறினார்.

உலகை அச்சுறுத்திவரும் உணவு பற்றாக்குறை, மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஆகிய இரு முக்கிய கருத்துக்கள், செப்டம்பர் 24, இவ்வியாழனன்று நடைபெற்ற கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

24 September 2020, 14:40