தேடுதல்

Vatican News
அருள்பணி Janusz Urbańczyk அருள்பணி Janusz Urbańczyk  

அடிப்படைவாதத்திற்கு மாற்றாக, சந்திக்கும் கலாச்சாரம்

அடிப்படைவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை, திருப்பீடம், எவ்வித விதிவிலக்கும் இன்றி, வன்மையாகக் கண்டனம் செய்கிறது - அருள்பணி Janusz Urbańczyk

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அடிப்படைவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை, திருப்பீடம், எவ்வித விதிவிலக்கும் இன்றி, வன்மையாகக் கண்டனம் செய்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், வியன்னாவில் நடைபெற்ற ஓர் இணையவழி கூட்டத்தில் கூறினார்.

ஐரோப்பாவில் பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் வளர்க்க உருவாக்கப்பட்டுள்ள OSCE என்ற அமைப்பு ஏற்பாடு செய்யும் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், செப்டம்பர் 14, 15 ஆகிய இருநாள்கள் வியன்னாவில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கு ஒன்றில், அடிப்படைவாதம் எவ்வகையில் வெளிப்பட்டாலும் அது கண்டனத்திற்குரியது என்று கூறினார்.

கருத்தியல், அரசியல், இனம், மதம் என்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வெளிப்படும் அடிப்படைவாத கொள்கைகள், இன்றைய உலகில் வெகு எளிதாக, வெகு வேகமாகப் பரவிவருவது குறித்து திருப்பீடம் கவலை கொள்கிறது என்று அருள்பணி Urbańczyk அவர்கள் தன் உரையில் கூறினார்.

அடிப்படைவாதத்தை இளையோர் மீது திணிக்க முயலும் பல்வேறு தீய சக்திகளுக்கு எதிராக, சட்டங்களும், காவல்துறையும் மட்டும் முயற்சிகள் மேற்கொள்வது போதாது என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbańczyk அவர்கள், சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் அடிப்படைவாதத்தின் தவறுகளை சொல்லித்தரும் முயற்சிகள் தேவை என்று கூறினார்.

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுடன் உழைத்துவரும் பல்வேறு அமைப்பினர், அடிப்படைவாதத்திற்கு மாற்றாக, சந்திக்கும் கலாச்சாரத்தையும், சகிப்புத்தன்மையையும் மக்களிடையே, குறிப்பாக, இளையோரிடையே உருவாக்கவேண்டும் என்று, அருள்பணி Urbańczyk அவர்கள், தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

மக்களின் ஆன்மீக நலனை வளர்க்க, மதங்கள் ஆற்றிவரும் முக்கியப்பணியை அரசுகள் அங்கீகரிக்க வேண்டும் என்றும், இதற்கு மாறாக, அரசுகளே, மதங்களுக்கு எதிராக அடிப்படைவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது வருத்தம் தரும் ஒரு போக்கு என்றும், அருள்பணி Urbańczyk அவர்கள், கூறினார்.

16 September 2020, 14:34