தேடுதல்

Vatican News
இஸ்பெயின் நாட்டின் கிராமப்புறம் இஸ்பெயின் நாட்டின் கிராமப்புறம்  (ANSA)

கிராமப்புற முன்னேற்றத்திற்கு பொறுப்புள்ள சுற்றுலா

இந்த உலகம் கோவிட்-19 கொள்ளைநோயின் பாதிப்புக்களிலிருந்து குணமாகும்போது, மக்கள் மத்தியில் நெருக்கத்தையும், உடன்பிறந்த உணர்வையும் ஊக்குவிக்கும் கருவியாக, சுற்றுலா மாறமுடியும் - கர்தினால் டர்க்சன்

மேரி தேரேசா: வத்திக்கான் செய்திகள்

இப்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் விதிமுறைகளால் ஏழைகள் மிகவும் துன்புறும்வேளை, கிராமப்புறங்களில், சுற்றுலா ஊக்குவிக்கப்படவேண்டும் என்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, உலக சமுதாயத்தை வலியுறுத்தியுள்ளது.

வருகிற செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படும், 41வது சுற்றுலா உலக நாளுக்கென, ஆகஸ்ட் 07, இவ்வெள்ளியன்று செய்தி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, உலகில், குறிப்பாக, கிராமங்கள் மற்றும், ஒதுக்குப்புறமான பகுதிகளில், பொறுப்புள்ள சுற்றுலாவை ஊக்குவிக்குமாறு, அரசுகளையும், பொருளாதார கொள்கை அமைப்பாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசுகள் மேற்கொள்ளும் இந்தப் பணியில், சமுதாய மற்றும், பொருளாதார நீதிக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படவும், சுற்றுச்சூழலும், கலாச்சாரங்களும் முழுமையாய் மதிக்கப்படவும் வேண்டும் என்றும், அச்செய்தி கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), இவ்வாண்டு சுற்றுலா உலக நாளுக்குத் தெரிவுசெய்துள்ள, “சுற்றுலாவும், கிராம முன்னேற்றமும்” என்ற தலைப்பை மையப்படுத்தியே, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களும், இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19க்குப்பின் மீள்கட்டமைப்பு

கோவிட்-19 விதிமுறைகளால் பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளவேளை, 2020ம் ஆண்டின் இறுதியில், இலட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்படும் ஆபத்து உருவாகும் மற்றும், உலகளாவிய பொருளாதாரத்தில் ஏறத்தாழ 1.2 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

அதிகமான வேலைவாய்ப்புக்களை வழங்கி, உலகப் பொருளாதாரத்தை உயர்த்தும் மிக முக்கிய துறைகளில் ஒன்றான சுற்றுலா, கோவிட்-19 விதிமுறைகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றுரைத்துள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், நீடித்த, நிலையான மற்றும், பொறுப்புள்ள சுற்றுலாக்களை ஊக்குவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கிராமப்புறங்களில் நீடித்த, மற்றும், பொறுப்புள்ள சுற்றுலா

கிராமப்புறங்களில் நீடித்த, நிலையான மற்றும், பொறுப்புள்ள சுற்றுலாக்களை ஊக்குவிப்பது, வேளாண்மையை நம்பியிருக்கும் கிராமப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் உந்துசக்தியாக அமையும் என்று கூறியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுலாவும், கிராமப்புற வேளாண்மையும், நாம் கட்டியெழுப்ப விரும்பும் புதிய உலகிற்குத் தேவையான இரு முக்கிய கூறுகள் என்று குறிப்பிட்டார்.

சுற்றுலாவையும், கிராம முன்னேற்றத்தையும் ஒன்றாக இணைப்பது, புதிய கலாச்சாரங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இன்றைய ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்கு மிகவும் தேவையான படைப்பைப் பாதுகாப்பதன் மதிப்பை உணர்வதற்கும் நல்லதொரு வழி என்று கூறினார், கர்தினால் டர்க்சன்.

இந்த உலகம் கோவிட்-19 கொள்ளைநோயின் பாதிப்புக்களிலிருந்து குணமாகும்போது, மக்கள் மத்தியில் நெருக்கத்தையும், உடன்பிறந்த உணர்வையும் ஊக்குவிக்கும் கருவியாக, சுற்றுலா மாறமுடியும் என்று கூறிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுலாத் துறையில் பணியாற்றுவோருக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

08 August 2020, 13:47