தேடுதல்

Vatican News
மறைபரப்பு ஞாயிறு திருப்பலி 29102019 மறைபரப்பு ஞாயிறு திருப்பலி 29102019  (Vatican Media)

மறைபரப்பு உலக நாள், அக்டோபர் 18, 2020

உலக அளவில் நடைபெறவிருந்த பல நிகழ்வுகளின் தேதிகள், கொரோனா தொற்றுக்கிருமியின் பரவலைத் தொடர்ந்து மாற்றப்பட்டுள்ளவேளை, இவ்வாண்டு மறைபரப்பு உலக நாள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி சிறப்பிக்கப்படும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு, மறைபரப்பு உலக நாள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேதியில், எந்தவித மாற்றமுமின்றி, உலக அளவில் சிறப்பிக்கப்படும் என்று, நற்செய்தி அறிவிப்பு பேராயம், ஆகஸ்ட் 28, இவ்வெள்ளியன்று தெளிவுபடுத்தியுள்ளது.

உலக அளவில் நடைபெறவிருந்த பல நிகழ்வுகளின் தேதிகள், கொரோனா தொற்றுக்கிருமியின் பரவலைத் தொடர்ந்து மாற்றப்பட்டுள்ளவேளையில், இவ்வாண்டு மறைபரப்பு உலக நாள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, வருகிற அக்டோபர் 18, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் என்று, நற்செய்தி அறிவிப்பு பேராயம், திருப்பீட தகவல் தொடர்பகம் வழியாக, வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

நம்பிக்கை, தன் இயல்பிலேயே, மறைபரப்பு தன்மை கொண்டது என்றும், மறைபரப்பு உலக நாள் கொண்டாட்டம், கிறிஸ்தவ நம்பிக்கையின் முக்கிய கூறாகிய எதிர்நோக்கை, அனைத்து விசுவாசிகளிலும் உயிரூட்டம் பெற உதவுகின்றது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல மறைமாவட்டங்களில், இந்த உலக நாள் தயாரிப்புகள் சில காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன என்றும், இவற்றில், இறைமக்களின் மறைப்பரப்பு முன்னெடுப்பு தெளிவாகத் தெரிகின்றது என்றும், அவ்வறிக்கை கூறுகிறது.

பாப்பிறை மறைப்பணிக் கழகங்களுக்கு ஆதரவாக, அந்த உலக நாளில் திரட்டப்படும் நிதி உதவிகளைப் பொருத்தமட்டில், மறைமாவட்ட ஆயர்களுக்கு பொறுப்பு உள்ளது என்றும், நற்செய்தி அறிவிப்பு பேராயம் கூறியுள்ளது. 

29 August 2020, 13:46