தேடுதல்

Vatican News
இருபதாம் நூற்றாண்டு திருத்தந்தையர் இருபதாம் நூற்றாண்டு திருத்தந்தையர் 

திருத்தந்தையர் வரலாறு - ஒரு முன்னோட்டம்

இயேசுவால் திருஅவையை வழிநடத்த நியமிக்கப்பட்ட புனித பேதுருவின் வழிவந்தவர்களே திருத்தந்தையர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வுலகில் திருஅவையை வழிநடத்திச் செல்லும் திருத்தந்தையர், இயேசுவால் திருஅவையை வழிநடத்த நியமிக்கப்பட்ட புனித பேதுருவின் வழிவந்தவர்கள். தற்போது திருஅவையை வழிநடத்திச்செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை வரலாற்றில் 266வது திருத்தந்தையாவார்.

திருத்தந்தையரின் வரலாறு சுவை நிறைந்தது, அதேவேளை, வேதனையும் கலந்தது. சிறையிலடைக்கப்பட்டவர்கள், டைபர் நதியில் உடல் வீசப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் என இந்த வரலாறு, கொஞ்சம் நீளமானது.

திருத்தந்தையர் ஏற்றுக்கொண்ட பெயர்களைப் பார்த்தோமானால், ‘ஜான்’ என்ற பெயர்தான், 23ம் ஜான் வரை வந்துள்ளது. ஆனால், வரலாற்றை நோக்கினால் 20ம் ஜான் என்ற பெயரை, எவரும் எடுத்ததாகத் தெரியவில்லை. ‘கிரகரி’ என்ற பெயரும், ‘பெனடிக்ட்’ என்ற பெயரும், ஒவ்வொன்றும் 16 முறைகள் வந்துள்ளன. 43 பெயர்கள், ஒருமுறைக்குமேல் பயன்படுத்தப்படவில்லை. இரு திருத்தந்தையரே, இரண்டு பெயர்களை இணைத்து சூட்டிக்கொண்டார்கள். அவர்கள், முதலாம் ஜான் பால் அவர்களும்,  இரண்டாம் ஜான் பால் அவர்களும். துவக்க காலத்திலிருந்தே தங்கள் இயல்பு பெயரை மாற்றிவைக்கும் பழக்கம், திருத்தந்தையரிடம் இருந்ததில்லை. 533ம் ஆண்டுதான் இப்பழக்கம் முதலில் நடைமுறைக்கு வந்தது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அப்போது  திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் இயற்பெயர் மெர்குரியுஸ். மெர்குரி என்பதோ அப்போது வணங்கப்பட்டுவந்த வேற்றுமத கடவுளின் பெயர். ஆகவே,  இவர் ‘இரண்டாம் ஜான்’ என, தனக்கு, புதுப்பெயர் சூட்டிக்கொண்டார். 1555ம் ஆண்டு ஆட்சி செய்த திருத்தந்தை இரண்டாம் மார்செலுஸ் அவர்களுக்குப்பின் அனைத்து திருத்தந்தையரும் தங்கள் இயற்பெயரை மாற்றிக்கொண்டனர். திருத்தந்தை இரண்டாம் மார்செலுஸ் அவர்களின் சகோதரி மகன்தான், புகழ்பெற்ற இயேசு சபை கர்தினால், புனித இராபர்ட் பெல்லார்மின்.

திருத்தந்தையரின் வரலாற்றில், புனித பேதுருவுக்குப்பின், அதிக ஆண்டுகள், திருஅவையை,  இவ்வுலகில் வழிநடத்தியவர் என்று பார்த்தால், 1846 முதல் 1878 வரை, ஏறத்தாழ 32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பயஸ் அவர்களே. முதல் திருத்தந்தை, புனித பேதுரு, கி.பி. 30ம் ஆண்டு முதல் 64 அல்லது 67 வரை, அதாவது, 37 ஆண்டுகள், திருத்தந்தையாக வழிநடத்தியுள்ளார். அதற்கு அடுத்ததாக, 31 ஆண்டுகள், 7 மாதங்கள், 23 நாட்கள் திருத்தந்தையாக பணியாற்றியவர், திருத்தந்தை 9ம் பயஸ். வணக்கத்திற்குரிய திருத்தந்தை 9ம் பயஸுக்கு அடுத்து வருபவர், நம்முடைய காலத்தில் வாழ்ந்த, திருத்தந்தை, புனித இரண்டாம் ஜான் பால். இவர் 26 ஆண்டுகள், 5 மாதங்கள், 18 நாட்கள் திருஅவையை வழிநடத்திச் சென்றார்.

திருஅவையில் மிகக் குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்கள் என்ற வரிசையில், முதலில் வருபவர், தேர்ந்தெடுக்கப்பட்ட 13 நாட்களிலேயே உயிரிழந்தவர், அதிலும், ஆயராக திருநிலைப்படுத்தப்படுவதற்கு முன்னரே, உயிரிழந்த திருத்தந்தை 7ம் உர்பான். 6ம் போனிபாஸ் அவர்கள், 16 நாட்களே, திருத்தந்தையாக இருந்தார். திருத்தந்தை 4ம் செலஸ்டின் அவர்கள், 17 நாட்களே இருந்தார். இவ்வரிசையில் 11வதாக வருபவர், 1978ம் ஆண்டு பதவியேற்று, 33 நாட்களே பணியாற்றி உயிரிழந்த, திருத்தந்தை முதலாம் ஜான் பால். குறைந்த காலம் எனப் பார்த்தால் 752ம் ஆண்டு ஆட்சி செய்த திருத்தந்தை இரண்டாம் ஸ்டீபனே. இவர் ஒரு நாளே திருத்தந்தையாக இருந்தார் என சில வரலாற்று ஏடுகளும், மூன்று நாட்கள் இருந்தார் என பல ஏடுகளும் கூறுகின்றன. இவர் ஆயர் திருநிலைப்பாட்டைப் பெறுவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதால், இவர் பெயர் திருத்தந்தையர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இதுவரை பணியாற்றியுள்ள 266 திருத்தந்தையரில், 217(216) பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். 266 பேரில் 40 பேர் கொலையுண்டுள்ளனர். பிரான்ஸ், கிரேக்கம்,  சிரியா,  ஆப்பிரிக்க கண்டம் (லிபியா, துனிசியா, அல்ஜீரியா), இஸ்பெயின், பாலஸ்தீனம், இங்கிலாந்து, நெதர்லாந்து, துருக்கி, Dalmatia (இன்றைய குரவேசியா), ஜெர்மனி, போர்த்துக்கல்,  போலந்து, அர்ஜென்டினா என பல்வேறு நாடுகளிலிருந்தும் திருத்தந்தையர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது பணியாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். திருத்தந்தையாக இருந்த ஆப்பிரிக்க நாட்டவர் மூவரும் புனிதர்கள். முறைப்படி திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக்கு எதிராக, தாங்களே திருத்தந்தையாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்தவர்களும் வரலாற்றில் உள்ளனர். ஆம், 38பேர் இவ்வாறு இருந்துள்ளனர். 1449ம் ஆண்டிற்குப்பின், இந்நிலை உருவாகவில்லை. ஆம், கடைசியாக இவ்வாறு இருந்தவர், ஐந்தாம் பெலிக்ஸ்.

19 August 2020, 16:06