தேடுதல்

Vatican News
மியான்மார் ரொங்கிஜியா புலம்பெயர்ந்தோர் மியான்மார் ரொங்கிஜியா புலம்பெயர்ந்தோர் 

புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறையின் அறிக்கை

உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புக்கள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை விவாதிக்கும் திருப்பீட அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, ஆப்ரிக்க கண்டத்தில் பல்வேறு அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் அலுவலகங்களை மூடவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும், இதனால், புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் மேலும் பல நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டியுள்ளது என்றும் திருப்பீட அவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறை, ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று வெளியிட்ட மடலில், உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புக்கள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஆப்ரிக்கா, பெரும் ஏரிகள் ஆகிய பகுதிகளில், பணியாற்றிவந்த இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் அமைப்பில், மக்களை நேரில் சந்தித்து செயலாற்றும் வாய்ப்புக்கள் இந்த தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் குறைந்துள்ளன என்றும், கணணி மற்றும் வலைத்தளம் வழியே புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு வகுப்புக்கள் நடத்தும் பணி மட்டும் நடைபெறுகிறது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில், தன்னார்வப் பணியாளர்களின் நேரடித் தொடர்புகள் குறைந்துள்ளதால், 15,000த்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மிகக் கடினமானச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட் 19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால் வளர்ந்து வரும் மனித வர்த்தகத்தைத் தடைசெய்ய, பல்வேறு அருள் சகோதரிகள், ஆற்றிவரும் உதவிகளும், இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

26 August 2020, 15:18