தேடுதல்

வத்திக்கானில் திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றும்  திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானில் திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருமுழுக்கு அருளடையாளம் குறித்து விசுவாச கோட்பாட்டு பேராயம்

திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருப்பணியாளர், “நான் உனக்கு திருமுழுக்கு கொடுக்கிறேன்” என்று கூறும்போது, அவர், அதை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சடங்குமுறையாக இல்லாமல், கிறிஸ்து அதில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதன்பேரில் நிறைவேற்றுகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால், நாங்கள் உனக்கு திருமுழுக்கு கொடுக்கிறோம்” என்பது உட்பட, திருமுழுக்கு அருளடையாளத்தில் பயன்படுத்தப்படும் மாற்றியமைக்கப்பட்ட சடங்குமுறைகள் செல்லுபடியாகாது என்று, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், ஆகஸ்ட் 06, இவ்வியாழனன்று அறிவித்துள்ளது.

திருமுழுக்கு அருளடையாளம் நிறைவேற்றப்படும் சடங்குமுறை குறித்து விளக்கம் அளித்துள்ள விசுவாச கோட்பாட்டு பேராயம், திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு விதிமுறைகளின்படி நிறைவேற்றப்படும் திருமுழுக்கு அருளடையாளமே சரியானது என்று கூறியுள்ளது.

திருத்தந்தையின் அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அந்தப் பேராயம், “தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் நான் உனக்கு திருமுழுக்கு கொடுக்கிறேன்” என்பது கத்தோலிக்கத் திருஅவையின் சடங்குமுறையில் உள்ளது என்றும், குழுமத்தின் பெயரால் திருமுழுக்கு அளிக்கிறேன் என்று வழங்கப்படும் திருமுழுக்கு, திருஅவையின் விதிமுறையின்படி செல்லாதது என்றும் கூறியுள்ளது.

திருமுழுக்கு அளிப்பவர் கிறிஸ்து

திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றும் திருப்பணியாளர், “நான் உனக்கு திருமுழுக்கு கொடுக்கிறேன்” என்று கூறும்போது, அவர், அதை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு சடங்குமுறையாக இல்லாமல், கிறிஸ்து அதில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதன்பேரில் நிறைவேற்றுகிறார் என்றும், அந்த திருவழிபாட்டு நிகழ்வில் பங்குபெறும் குழுமம், உண்மையான திருஅவையின் இயல்பை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும், அந்த அறிக்கை கூறுகிறது.    

ஒருவருக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றும்போது, கிறிஸ்துவே அதை நிறைவேற்றுகிறார், அந்த நிகழ்வில் ஆண்டவரே முக்கிய பங்கு வகிப்பவர் என்று, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கொள்கை விளக்கம் (Sacrosanctum Concilium, n. 28) கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது, விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம்.

தந்தை மற்றும், தாயின் பெயரால், ஞானத்தந்தை மற்றும், ஞானத்தாயின் பெயரால், ஞானப் பெற்றோரின் பெயரால், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், திருமுழுக்கு வழங்கும் குழுமம் ஆகியோரின் பெயரால், இறைத்தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் நான் உனக்கு திருமுழுக்கு கொடுக்கிறேன் என்ற சொற்கள், திருமுழுக்கு அருளடையாளம் வழங்கும்போது சொல்லப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இவ்வாறு கூறியுள்ளது.

திருமுழுக்கு அருளடையாளம் நிறைவேற்றப்படும்போது, திருஅவைப் பணியின் உண்மையான இயல்பையும் குறிப்பிட்டுள்ள விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம், இந்த கொண்டாட்டத்தை நிறைவேற்றுபவர், கிறிஸ்து அதில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதில் ஆற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2020, 13:11