தேடுதல்

பெய்ரூட் நகர வெடிவிபத்தையடுத்து காரித்தாஸ் நிறவனம் நிறைவேற்றிய திருப்பலி பெய்ரூட் நகர வெடிவிபத்தையடுத்து காரித்தாஸ் நிறவனம் நிறைவேற்றிய திருப்பலி 

உள்நாட்டு இயக்கங்களுக்கு ஆதரவாக உலக காரித்தாஸ்

பல்வேறு நெருக்கடிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் உதவிகளுக்காகக் காத்திராமல், உடனுக்குடன் உதவிகளை வழங்க முன்வரும் உள்நாட்டு இயக்கங்களை அரசுகள் போற்றி வளர்க்கவேண்டும் - காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எந்த ஒரு பேரிடரிலும், உடனடி உதவிகளை வழங்க முன்வரும் உள்நாட்டு இயக்கங்களுக்கு ஒவ்வொரு நாட்டின் அரசும் தகுந்த ஆதரவு வழங்கவேண்டும் என்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான அகில உலக காரித்தாஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 19, இப்புதனன்று, மனிதாபிமான உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்ஸியஸ் ஜான் அவர்கள் விடுத்த செய்தியில், ஒவ்வொரு நாட்டிலும், உள்நாட்டில் இயங்கிவரும் இயக்கங்களை பாராட்டியுள்ளார்.

உலகெங்கும் பரவியுள்ள கொள்ளைநோய், மற்றும், ஆகஸ்ட் 4ம் தேதி, பெய்ரூட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்து ஆகியவை, மனிதாபிமான உலக நாளின் கொண்டாட்டங்களைக் குறைத்து, செயல்பாடுகளை கூட்டியுள்ளன என்று திருவாளர் ஜான் அவர்கள் கூறினார்.

இயற்கைப் பேரிடர், விபத்துக்கள், வன்முறைத் தாக்குதல்கள், கொள்ளைநோய் என்ற பல்வேறு நெருக்கடிகளிலும், பன்னாட்டு நிறுவனங்களின் உதவிகளுக்காகக் காத்திராமல், உடனுக்குடன் உதவிகளை வழங்க முன்வரும், உள்நாட்டு இயக்கங்களை, அரசுகள் போற்றி வளர்க்கவேண்டும் என்று, காரித்தாஸ் பொதுச்செயலர் கூறினார்.

மேலும், உள்நாட்டில் இயங்கும் இவ்வமைப்புக்கள், உள்நாட்டு கலாச்சாரங்களையும், மக்களின் மனநிலையையும் அறிந்து செயல்படுவதால், காரித்தாஸ் நிறுவனம், இத்தகைய அமைப்புக்களை ஊக்குவிப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறது என்று, ஜான் அவர்கள் எடுத்துரைத்தார்.

மனிதாபிமான உலக நாள்

2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. நிறுவன தலைமையகத்தைப் பயங்கரவாதிகள் தாக்கியதில், அந்நாட்டின் ஐ.நா. பிரதிநிதி Sergio Vieira de Mello அவர்கள் உட்பட, 22 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய நாடுகள் நிறுவனம், இந்த நாளை, மனிதாபிமான உலக நாளாக 2008ம் ஆண்டு அறிவித்தது.

உலகெங்கும் பல்வேறு இக்கட்டான சூழல்கள் மத்தியிலும் மனிதாபிமானப் பணிகளைத் துணிவுடன் ஆற்றும், உண்மையான வீரர்களை ஊக்குவிப்பதற்கும், இந்தப் பணிகளை ஆற்றுகையில், உயிரிழந்தோர், மற்றும், காயமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், மனிதாபிமான உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.

20 August 2020, 13:56