தேடுதல்

கர்தினால் மைக்கிள் செர்னி கர்தினால் மைக்கிள் செர்னி  

மனித உயிர்கள் மீது மதிப்பு குறைந்துவருவது முக்கிய காரணம்

கோவிட் 19 கொள்ளைநோய் உருவானதற்கு, காரணங்களை ஆய்வுசெய்யும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 கொள்ளைநோய் உருவானதற்கு, பல்வேறு கோணங்களிலிருந்து காரணங்கள் ஆய்வுசெய்யப்பட்டுவரும் வேளையில், அடிப்படையில், மனித உயிர்கள், படைப்பு, மனித சமுதாயம் ஆகியவற்றின் மீது மதிப்பு குறைந்துவருவதை, இந்நோய் உருவாக ஒரு முக்கிய காரணமாக சிந்திக்கவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கர்தினால் மைக்கிள் செர்னி

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், 'In Terris' என்ற இத்தாலிய செய்தித்தாளுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறிய இக்கருத்துக்களை, புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறை, தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இக்கொள்ளைநோய் நம் ஒவ்வொருவரின் பலமற்ற நிலையை வெளிக்கொணர்ந்துள்ளதால், நாம் நம்மைக் காப்பாற்றும் நிலையிலேயே தங்கி, மற்றவர்களைப் புறக்கணிக்கும் ஆபத்தும் வளர்ந்துள்ளது என்று கர்தினால் செர்னி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் சார்ல்ஸ் மாங் போ

மேலும், கோவிட் 19 கொள்ளைநோய் இவ்வுலகின்மீது சுமத்தியுள்ள பெரும் சுமைகளை, அனைவரும் சேர்ந்து சுமப்பதைவிடுத்து, அவற்றை, நலிவுற்ற வறியோரின் தோள்கள் மீது சுமத்துவது நீதியல்ல என்று, ஆசிய கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், பன்னாட்டு சமுதாயத்திற்கு விடுத்த ஒரு விண்ணப்பத்தில், இந்தக் கொள்ளைநோய் காலத்தில் மனித சமுதாயம் பிளவுபட்டிருந்தால், இந்தப் பிரச்சனையை வேரறுக்க இயலாது என்று கூறியுள்ளதை, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறை ஆகஸ்ட் 25 இச்செவ்வாயன்று தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த உலகத்தை நம் பொதுவான இல்லமாக கருதாமல், சுற்றுச்சூழலைச் சீரழித்தால், வறியோர் பலர் தங்கள் இல்லங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாவர் என்றும், அதனால் இந்த நோயின் பரவல் இன்னும் கூடும் என்றும் கர்தினால் போ அவர்கள் தன் விண்ணப்பத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2020, 15:11