தேடுதல்

Vatican News
சமூகத்தொடர்பு திருப்பீட அவையின் தலைவர் முனைவர் பவுலோ ரூஃபினி சமூகத்தொடர்பு திருப்பீட அவையின் தலைவர் முனைவர் பவுலோ ரூஃபினி  (Vatican Media)

ஆப்ரிக்க சமூகத்தொடர்பாளர்களுடன் திருப்பீடம் உடனிருக்கும்

ஆப்ரிக்க சமூகத்தொடர்பாளர்கள், தங்களின் சமூகத்தொடர்புப் பணிகளை ஆற்றுகையில், அவர்களோடு திருப்பீடம் எப்போதும் பயணிக்கும் என்று, அக்கண்டத்தின் கத்தோலிக்க சமூகத்தொடர்பாளர்களிடம் கூறினார், முனைவர் பவுலோ ரூஃபினி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்க சமூகத்தொடர்பாளர்கள், தங்களின் சமூகத்தொடர்புப் பணிகளை ஆற்றுகையில், அவர்களோடு திருப்பீடம் எப்போதும் பயணிக்கும் என்று, அக்கண்டத்தின் கத்தோலிக்க சமூகத்தொடர்பாளர்களிடம் கூறினார், சமூகத்தொடர்பு திருப்பீட அவையின் தலைவர் முனைவர் பவுலோ ரூஃபினி (Paolo Ruffini).

வத்திக்கான் வானொலியில் ஆப்ரிக்க ஆங்கில மொழிப் பிரிவு துவக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஆப்ரிக்க கத்தோலிக்க சமூகத்தொடர்பாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட, மெய்நிகர் கருத்தரங்கை, ஜூலை 17, இவ்வெள்ளியன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கிவைத்து  உரையாற்றிய ரூஃபினி அவர்கள், KiSwahili மொழியில், “நாம் ஒன்றிணைந்து இருக்கிறோம்” என்று பொருள்படும் Tuko Pamoja என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார்.

சிறுவயது முதலே ஆப்ரிக்க கண்டத்தோடும், அதன் மக்களோடும் தான் நெருக்கமாக இருப்பதாகவும், பல ஆண்டுகளுக்குமுன், அதாவது 1967ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் வெளியிட்ட “ஆப்ரிக்க பூமி” (Africae terrarium) என்ற ஏடு தன்னை மிகவும் ஈர்த்ததாகவும் எடுத்துரைத்தார், முனைவர் ரூஃபினி.

இந்த ஏட்டில்,  திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், ஆப்ரிக்காவில் திருஅவையின் சமுதாய மறைப்பணி பற்றிய தனது தொலைநோக்குப் பார்வையை குறிப்பிட்டுள்ளார் என்று கூறிய முனைவர் ரூஃபினி அவர்கள், சமூகத்தொடர்பு, புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் அல்லது, புரிந்துகொள்ளாத்தன்மையை வளர்க்கும் என்றும் கூறினார்.

இந்த மெய்நிகர் கருத்தரங்கு, வத்திக்கான் வானொலியின் ஆப்ரிக்க ஆங்கில மொழிப் பிரிவும், ஆப்ரிக்க SIGNIS அமைப்பும் இணைந்து நடத்தின. “ஆப்ரிக்காவில் இன மற்றும், சமுதாயப் பிரச்சனைகளைக் களைவதற்கு ஒரு கருவியாக, கதை சொல்லுதல்” என்ற தலைப்பில் இந்த மெய்நிகர் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் பல முக்கிய வல்லுனர்கள் வழங்கிய உரைகளை, https://www.youtube.com/watch?v=YmiH9mMU3vg என்ற இணையதள முகவரியில் கேட்கலாம். 

18 July 2020, 13:00