தேடுதல்

Vatican News
மனிதவர்த்தகத்திற்கு எதிரான கூட்டணி என்ற அமைப்பு - OSCE - நடத்திய கருத்தரங்கு மனிதவர்த்தகத்திற்கு எதிரான கூட்டணி என்ற அமைப்பு - OSCE - நடத்திய கருத்தரங்கு 

"மனிதவர்த்தகத்தைத் தண்டித்து, நீதியை நிலைநாட்டுதல்"

மனித வர்த்தகத்தைக் களைவதற்கு, நாடுகளிடையே கூடுதலான ஒத்துழைப்பும், பன்னாட்டு காவல் துறைகளான Interpol மற்றும் Europol ஆகியவற்றிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவதும் முக்கியம் - ஆயர் Joseph Grech

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதவர்த்தகத்திற்கு எதிரான கூட்டணி என்ற அமைப்பு, ஜூலை 20 முதல் 22 முடிய ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் நடத்திய கணணி வழி மெய்நிகர் கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில், ஆயர் Joseph Grech அவர்கள் பங்கேற்றார்.

"தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதை முடிவுக்குக் கொணர்தல்: மனிதவர்த்தகம் நடைபெறுவதைத் தண்டித்து, நீதியை நிலைநாட்டுதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை, OSCE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

மனித வர்த்தகம் என்ற கொடுமையில் ஈடுபடுவோர் தண்டனையேதும் பெறாமல் தப்பித்துவிடுவதால், இத்தொழில், தற்போது மிகச் சாதாரணமாக நடைபெறுகிறது என்றும், இந்தக் கொடுமைக்கு, 4 கோடி மக்கள் இலக்காகின்றனர் என்றும் OSCE நிறுவனம் கூறியுள்ளது.

மனித வர்த்தகம் என்பது ஒரு குற்றம் என்பதை அனைத்து நாடுகளும் சட்டப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், அதில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவோ, தடுக்கவோ தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால், இக்குற்றத்தை செய்வோரின் எண்ணிக்கை கூடிவருகிறது என்று, ஆயர் Grech அவர்கள் இந்த மெய்நிகர் கருத்தரங்கில் கூறினார்.

உலகெங்கும் பரவியிருக்கும் இந்தக் குற்றத்தைத் தடுப்பதற்கு அரசுகள் போதுமான நிதியை ஒதுக்காமல் இருப்பது, இக்குற்றம் வளர்வதற்கு வழி வகுக்கிறது என்று ஆயர் Grech அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மேலும், இக்கொடுமையில் சிக்கியுள்ள மக்களிடம் போதிய நிதி வசதி இல்லாததால், அவர்கள் நீதி மன்றங்களை நெருங்க இயலாமல் துன்புறுகின்றனர் என்பதையும் ஆயர் Grech அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்தக் கொடுமையைக் களைவதற்கு, நாடுகளிடையே கூடுதலான ஒத்துழைப்பும், பன்னாட்டு காவல் துறைகளான Interpol மற்றும் Europol ஆகியவற்றிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவதும் முக்கியம் என்று ஆயர் Grech அவர்கள் தன் பகிர்வில் வலியுறுத்தினார்.

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், மனித வர்த்தகம் என்ற கொடுமைக்கு பல கோடி பெண்களும், சிறுவர், சிறுமியரும் உள்ளாகியிருப்பதாக OSCE நிறுவனம் கூறியுள்ளது.

மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 30ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

24 July 2020, 11:34