தேடுதல்

Vatican News
Srebrenicaவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூரும் மக்கள் Srebrenicaவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூரும் மக்கள் 

Srebrenica இனப்படுகொலை: “கலாச்சாரத்தின் தோல்வி”

முன்னாள் யூக்கோஸ்லாவியாவிலிருந்து, போஸ்னியா தனி நாடாகப் பிரிந்துசெல்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, போஸ்னியாவில் போர் இடம்பெற்ற காலம் முழுவதும், அந்தப் போர் நிறுத்தப்பட தொடர்ந்து அழைப்பு விடுத்துவந்தார், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

25 ஆண்டுகளுக்குமுன் Srebrenicaவில் இடம்பெற்ற இனப்படுகொலை, இரண்டாம் உலகப்போருக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடூரமான நடவடிக்கைகளில் ஒன்று என, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியிருப்பதை, வத்திக்கான் செய்தித்துறை, ஜூலை 11, இச்சனிக்கிழமையன்று நினைவுகூர்ந்துள்ளது.

1995ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, இன அழிப்பு என்ற பெயரில், இராணுவத் தளபதி Ratko Mladic அவர்கள் விடுத்தக் கட்டளையின் பேரில், போஸ்னிய-செர்பிய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில், எட்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் படுகொலை செய்யப்பட்டனர், இவர்களில் சிலர் இளம் வயதினர். Mladic அவர்கள், 2017ம் ஆண்டில், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டார். 

போஸ்னியாவில் இந்த இனப்படுகொலை நடத்தப்பட்டு ஐந்து நாள்கள் சென்று, அதாவது ஜூலை மாதம் 16ம் தேதி ஞாயிறு மூவேளை செப உரையில், அது குறித்து பேசிய, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இந்தப் படுகொலை, மனித சமுதாயத்திற்கு எதிரான குற்றம் என்று கூறினார்.

முன்னாள் யூக்கோஸ்லாவியாவிலிருந்து, போஸ்னியா, தனிநாடாகப் பிரிந்துசெல்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, போஸ்னியாவில் போர் இடம்பெற்ற காலம் முழுவதும், அப்போர் நிறுத்தப்பட தொடர்ந்து அழைப்பு விடுத்துவந்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், ஐரோப்பாவும், மனித சமுதாயமும், இழிவான நரகச் சூழலுக்கு ஆழமாகத் தள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். 

1997ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி போஸ்னியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், ஒருபோதும் போர்  வேண்டாம், ஒருபோதும் வெறுப்பும் சகிப்பற்றதன்மையும் வேண்டாம் என்றும், மன்னிக்கவும், மன்னிக்கப்படவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

Srebrenica இனப்படுகொலை இடம்பெற்றதற்கு ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னும், போஸ்னியா-எர்செகொவினா, அதன் பிரச்சனைகளிலிருந்து முழுமையாக வெளிவராமல் இருந்தவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும், ஏனைய மதத்தவர் மத்தியில் உடன்பிறந்த உணர்வு இடம்பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் என்பது, குறிப்பிடத்தக்கது.

11 July 2020, 13:35