தேடுதல்

Vatican News
கர்தினால் பீட்டர் டர்க்சன் கர்தினால் பீட்டர் டர்க்சன்   (@VaticanMedia)

கோவிட்-19 காலத்தில், வருங்காலத்திற்கு தயாரிப்பு

ஆயுதம் தாங்கிய போர்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள், வறுமை போன்றவை, உலகில் அமைதி நிலவவுதற்குத் தடைகளாக உள்ளன - கர்தினால் டர்க்சன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், வருங்காலத்திற்குத் தயாரிப்பு மற்றும், அமைதியைக் கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் தலைமையில் வத்திக்கானில், ஜூலை 07, இச்செவ்வாயன்று, இணையதளம் வழியாக செய்தியாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இப்போதைய கொள்ளைநோய் உருவாக்கியுள்ள மனிதாபிமான நெருக்கடி, இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகம் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளில் ஒன்று எனவும், உலக அளவில் இந்த கொள்ளைநோயை ஒழிப்பதற்கும், உலகம் எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சரிவை சரிசெய்யவும், அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறினார், கர்தினால் டர்க்சன்.

இந்த இரண்டு பிரச்சனைகளும், உலக அமைதியோடு தொடர்புடையவை என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 குழு, இந்த பிரச்சனைகளைக் களையும் முறைகள்பற்றி பரிசீலித்து வருகிறது என்று கூறினார்.  

அமைதியின்றி குணமடைதல் இயலாத காரியம் என்றும், போர்களைக் குறைப்பது, அநீதிகளையும், சமத்துவமின்மைகளையும் குறைப்பதற்கு ஒரே வாய்ப்பு என்றும், ஆயுதம் தாங்கிய போர்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள், வறுமை போன்றவை, உலகில் அமைதி நிலவவுதற்குத் தடைகளாக உள்ளன என்றும் கர்தினால் எடுத்துரைத்தார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவை, உலகளாவிய போர்நிறுத்தம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு, 170 நாடுகள் ஆதரவளித்துள்ளன எனவும், இந்த தீர்மானத்தை தான் வரவேற்பதாகவும், கூறிய கர்தினால், நாம் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டும், போரிட தயாரித்துக்கொண்டும் இருந்தால், கோவிட்-19 கொள்ளைநோயை ஒருபோதும் ஒழிக்க இயலாது என்றும் கூறினார்.

மனிதரின் பாதுகாப்பு, உலகளாவிய உறவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும், திருஅவையும், உலகளாவிய சமுதாயமும், தற்போதைய நெருக்கடியைக் களையவும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும், கர்தினால் டர்க்சன் அவர்கள் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்பாக, வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள பொருளாதாரக் குழுவின் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Alessandra Smerilli அவர்களும், அதே குழுவின்  மற்றொரு ஒருங்கிணைப்பாளரும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் அலுவலகருமான Alessio Pecorario அவர்களும், இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

07 July 2020, 13:42