தேடுதல்

இஸ்ரேல், பாலஸ்தீனாவின் ஒரு பகுதியை இணைத்துள்ளதற்கு எதிர்ப்பு இஸ்ரேல், பாலஸ்தீனாவின் ஒரு பகுதியை இணைத்துள்ளதற்கு எதிர்ப்பு  

உலக அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் இஸ்ரேலின் முடிவு

பாலஸ்தீனா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும், இணைந்து முடிவெடுக்காமல், ஒரு தரப்பினர் மட்டும் தனித்து முடிவெடுப்பது இரு நாடுகளுக்கும், உலக அமைதிக்கும் ஆபத்தானது - கர்தினால் பியெத்ரோ பரோலின்

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீனா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும், இணைந்து முடிவெடுக்காமல், ஒரு தரப்பினர் மட்டும் தனித்து முடிவெடுப்பது இரு நாடுகளுக்கும், உலக அமைதிக்கும் ஆபத்தானது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தன் கவலையை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாடு, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இரு நாடுகளின் சார்பாக திருப்பீடத்தில் பணியாற்றும் அந்நாட்டு தூதர்களை, ஜூன் 30 இச்செவ்வாயன்று சந்தித்த கர்தினால் பரோலின் அவர்கள், புனித பூமியின் காசா நிலப்பகுதியை இஸ்ரேல் அரசு தன்னகப்படுத்திக் கொள்வது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

இச்சந்திப்பைக் குறித்து, ஜூலை 1, இப்புதனன்று மாலையில் வத்திக்கான் செய்தித்துறை வெளியிட்ட அறிக்கையில், கர்தினால் பரோலின் அவர்கள் இரு நாடுகளின் தூதர்களைச் சந்தித்து, மத்தியக் கிழக்குப் பகுதியில் உருவாகக்கூடிய மோதல்கள் குறித்து கவலையை வெளியிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீனா என்பவை, இரு வேறு நாடுகள் என்பதையும், உலக அவைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைக்கோடுகளே, அவ்விரு நாடுகளின் எல்லைக் கோடுகள் என்பதையும் திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட, 2019ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியும், 2020ம் ஆண்டு மே 20ம் தேதியும் திருப்பீடம் வெளியிட்ட கருத்துக்கள், இவ்வறிக்கையில் நினைவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், 2014ம் ஆண்டு, ஜூன் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் தலைவர்களை வத்திக்கானுக்கு வரவழைத்த வேளையில், புனித பூமியில் அமைதி உருவாக, வத்திக்கான் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டில், திருத்தந்தை கூறிய சொற்கள், இவ்வறிக்கையில் பதிவாகியுள்ளன.

"சந்திப்பதற்கு ஆம் என்றும், மோதலுக்கு இல்லை என்றும், உரையாடலுக்கு ஆம் என்றும், வன்முறைக்கு இல்லை என்றும், ஒப்பந்தங்களுக்கு ஆம் என்றும், சீண்டிவிடும் வழிகளுக்கு இல்லை என்றும் கூறும் துணிவை வழங்கியருளும்" என்று திருத்தந்தை எழுப்பிய வேண்டுதலின் வரிகள், இவ்வறிக்கையில் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2020, 14:16