தேடுதல்

Vatican News
கொலம்பியாவில் கோவிட்-19ன் எதிர்மறை தாக்கம் கொலம்பியாவில் கோவிட்-19ன் எதிர்மறை தாக்கம்  (AFP or licensors)

வளரும் நாடுகளின் கடன் இரத்துச்செய்யப்பட திருப்பீடம் அழைப்பு

கோவிட்-19 கொள்ளைநோய், வளரும் நாடுகளில், அதிகமான நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளது, இது, உலகப் பொருளாதாரத்தின் சமநிலைக்குப் பெரும் சவாலாக உள்ளது - பேராயர் யுர்க்கோவிச்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏற்கனவே  விடுத்துள்ள அழைப்பை, மீண்டும், ஜூலை 02, இவ்வியாழனன்று புதுப்பித்துள்ளது திருப்பீடம்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், UNCTAD எனப்படும் ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு நடத்திய, 67வது அமர்வில், ஜூலை 2, இவ்வியாழனன்று, அறிக்கை சமர்ப்பித்த வேளையில், ஏழை நாடுகளின் கடன்கள் இரத்து செய்யப்படுமாறு கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 கொள்ளைநோய், வளரும் நாடுகளில், அதிகமான நிதி நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்றும், இது, உலகப் பொருளாதாரத்தின் சமநிலைக்குப் பெரும் சவாலாக உள்ளது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.   

கொரோனா கொள்ளைநோயால், பல தொழிற்சாலைகள் மற்றும், உற்பத்தி வசதிகள், கட்டாயமாய் மூடப்பட்டிருந்த நாளிலிருந்து, சரக்குகளின் விநியோகமும் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்துள்ளது என்றும், இதனால் மக்கள்  மத்தியில் பணப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது என்றும், பேராயர் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் உருவாகியுள்ள நிச்சயமற்றதன்மையால், பெரிய கூட்டுறவு அமைப்புகள், நீண்டகால முதலீடுகளைப் போடுவதற்குத் தயங்குகின்றன என்றும், தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய், வளரும் நாடுகளில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாய்ப் பாதித்துள்ளது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

அண்மை ஆண்டுகளாக வறிய நாடுகள் சேர்த்துவைத்துள்ள வெளிநாட்டு கடன் சுமைகள் நீக்கப்படுவதன் வழியாக, அந்நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளும் கடுந்துன்பங்களை அகற்றமுடியும் என்று கூறிய பேராயர் .யுர்க்கோவிச் அவர்கள், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் வளரும் நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்படுமாறு உலகளாவிய சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

03 July 2020, 13:18