தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸுடன் இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மொர்ரிக்கோனே திருத்தந்தை பிரான்சிஸுடன் இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மொர்ரிக்கோனே 

பாப்பிறை பதக்கம் பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர்

இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மொர்ரிக்கோனே அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றிய மனிதர், அவர் உருவாக்கிய இசையில், ஆன்மீகம் வெளிப்படுகிறது - கர்தினால் ஜான்பிராங்கோ இரவாசி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
தென் அமெரிக்க நாடுகளில் இயேசு சபையினர் மேற்கொண்ட மறைபரப்பு முயற்சிகளை மையமாகக் கொண்ட "The Mission" என்ற திரைப்படம் உட்பட, கிறிஸ்தவ கதையம்சம் கொண்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்த இத்தாலிய இசையமைப்பாளர் என்னியோ மொர்ரிக்கோனே (Ennio Morricone) அவர்கள், ஜூலை 6ம் தேதி, இத்திங்களன்று, தன் 91வது வயதில் இறையடி சேர்ந்தார்.
மொர்ரிக்கோனே அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றிய மனிதர் என்றும், அவர் உருவாக்கிய இசையில், ஆன்மீகம் வெளிப்படுகிறது என்றும், திருப்பீட கலாச்சார அவையின் தலைவர், கர்தினால் ஜான்பிராங்கோ இரவாசி அவர்கள் கூறினார்.
மொர்ரிக்கோனே அவர்கள் ஆற்றிய இசைப்பணிக்கென, 2019ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி, அவருக்கு, பாப்பிறை பதக்கம் ஒன்று வழங்கப்பட்டதையும், கர்தினால் இரவாசி அவர்கள் நினைவுகூர்ந்தார்.
1928ம் ஆண்டு, நவம்பர் 10ம் தேதி உரோம் நகரில் பிறந்த மொர்ரிக்கோனே அவர்கள், ஆறு வயது முதல், இசையில் ஆர்வம் கொண்டவராய், தன் 12வது வயதில், புனித செசிலியா இசைப்பள்ளியில் தன் பயிற்சியைத் துவக்கினார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக, 400க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றிய மொர்ரிக்கோனே அவர்கள் 1986ம் ஆண்டு இசையமைத்த "The Mission" திரைப்படத்தின் பின்னணி இசை, மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது.
1814ம் ஆண்டு, இயேசு சபை, மீண்டும் புதுப்பிக்கப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டதையொட்டியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது மொர்ரிக்கோனே அவர்கள் கொண்டிருந்த மதிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், அவர் உருவாக்கிய Missa Papae Francisci என்ற இசைநிகழ்ச்சி, உரோம் நகரில், இயேசு சபையினரின் தாய் ஆலயமாகத் திகழும் ஜெசு ஆலயத்தில், 2015ம் ஆண்டு, ஜூன் 10ம் தேதி நடைபெற்றது.
 

08 July 2020, 15:39