தேடுதல்

Vatican News
மூடப்பட்டுள்ள லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம் மூடப்பட்டுள்ள லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம்  (AFP or licensors)

ஆகஸ்ட் 15ம் தேதி, லூர்து நகரில் கர்தினால் பரோலின்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆகஸ்ட் 15ம் தேதி, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுவார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஆகஸ்ட் 15ம் தேதி, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கிருமியின் உலகளாவியப் பரவல் என்ற நெருக்கடி உருவாவதற்கு முன்னரே, கர்தினால் பரோலின் அவர்களுக்கு, இத்திருத்தலத்திலிருந்து இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது என்றும், அந்த அழைப்பினை ஏற்று, கர்தினால் பரோலின் அவர்கள் அங்கு செல்கிறார் என்றும், திருப்பீடச் செயலகம், ஜூலை 6, இத்திங்களன்று உறுதி செய்துள்ளது.

தொற்றுக்கிருமியின் உலகளாவியப் பரவலையடுத்து, திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலி, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளும், நோயுற்றோர் உலக நாளும் சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தையின் பிரதிநிதியாக, கர்தினால் பரோலின் அவர்கள், அத்திருத்தலத்திற்கு முதல் பயணம் மேற்கொண்டார்.

2018ம் ஆண்டு, புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் அவர்களின் திருநாளையொட்டி இரண்டாம் முறையாக இத்திருத்தலத்திற்குச் சென்ற கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மேற்கொள்ளும் பயணம், மூன்றாவது பயணமாக அமையும்.

மேலும், கர்தினால் பரோலின் அவர்கள், பிரான்ஸ் நாட்டின், ஆர்ஸ் நகரில், ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி சிறப்பிக்கப்படும், புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் திருநாளன்று, இப்புனிதரின் திருத்தலத்திற்குச் சென்று,, திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரர் கியோர்க் இராட்சிங்கர் (Georg Ratzinger) அவர்கள், ஜூலை 1ம் தேதி இறையடி சேர்ந்ததையடுத்து, அவரது, அடக்கத் திருப்பலி, ஜூலை 8, இப்புதனன்று, காலை 10 மணிக்கு, Regensburg பேராலயத்தில் இடம்பெற்றது.

தொற்றுநோய் விதிமுறைகளின் கட்டுப்பாடுகள் காரணமாக, மிகக் குறைவான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்ற இந்த அடக்கத்திருப்பலி, முகநூல் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

08 July 2020, 14:47