தேடுதல்

Vatican News
பிலிப்பீன்சில் இயற்கை சக்திகளின் துணைகொண்டு மின்சார சக்தி உருவாக்கம் பிலிப்பீன்சில் இயற்கை சக்திகளின் துணைகொண்டு மின்சார சக்தி உருவாக்கம்  

மாசின் மறைமாவட்டத்திற்கு திருப்பீடத்தின் பாராட்டுக்கள்

உலகில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களில், புதுப்பிக்கத்தக்க சக்தியை முழுமையாகப் பயன்படுத்தும் முதல் மறைமாவட்டமாக மாசின் மறைமாவட்டம் விளங்குகிறது என்று திருப்பீடம் கூறியுள்ளது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
சுற்றுச்சூழலையும், நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தையும் காப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Laudato si’ திருமடல் வெளியானதன் 5ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், இயற்கை சார்ந்த சக்திகளைப் பயன்படுத்தும், பிலிப்பீன்ஸ் தலத்திருஅவைக்கு, குறிப்பாக, மாசின் (Maasin) மறைமாவட்டத்திற்கு, திருப்பீடம் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
உலகில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களில், புதுப்பிக்கத்தக்க சக்தியை முழுமையாகப் பயன்படுத்தும் முதல் மறைமாவட்டமாக மாசின் மறைமாவட்டம் விளங்குகிறது என்று திருப்பீடம் கூறியுள்ளது.
மாசின் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள 42 ஆலயங்களிலும் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்டு, இயற்கை சக்தி பயன்படுத்தப்படுவதை, வத்திக்கான் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
WeGen Laudato Si’ என்ற பெயரில் வத்திக்கானிலிருந்து வெளியான அறிக்கையில், மாசின் மறைமாவட்டத்தின் செயல்பாடு தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் குறித்து, தன் மறைமாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று இம்மறைமாவட்டத்தின் ஆயர் Precioso Cantillas அவர்கள் கூறியுள்ளார்.
2017ம் ஆண்டு, மாசின் மறைமாவட்டத்தில் ஆரம்பமான இந்த முயற்சியால், மறைமாவட்டத்தைச் சேர்ந்த 50 கட்டடங்கள், 50 மறைமாவட்டப் பள்ளிகள், மற்றும் 40 பங்கு ஆலயங்கள் அனைத்திலும் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன என்று ஆயர் Cantillas அவர்கள் கூறினார்.
இந்த மறைமாவட்டத்தின் பேராலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளித்தகடுகளால், பேராலயத்தின் மின் கட்டணத்தில் ஒவ்வொரு மாதமும் 2000 டாலர்கள் குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஆயர் Cantillas அவர்கள், இந்தத் தகடுகளை நிறுவுவதற்கு ஆன செலவை, ஏழு ஆண்டுகளில் மீண்டும் பெறமுடியும் என்றும், இந்தத் தகடுகள், 25 ஆண்டுகள் செயலாற்றும் என்றும் கூறியுள்ளார்.
 

25 June 2020, 14:04