தேடுதல்

Vatican News
இணையதளம் வழியாக மறைக்கல்வி இணையதளம் வழியாக மறைக்கல்வி 

சந்திப்பு கலாச்சாரத்தை வளர்க்கும் புதிய மறைக்கல்வித் தொகுப்பு

புதிய மறைக்கல்வி தொகுப்பில், யூதர்களோடும், இஸ்லாமியரோடும் நாம் மேற்கொள்ளவேண்டிய உரையாடல், மற்றும், ஏனைய கிறிஸ்தவர்களோடு கொள்ளவேண்டிய ஒன்றிப்பு ஆகிய அம்சங்கள் சிறப்புப் பகுதிகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் வாழும் டிஜிட்டல் கலாச்சாரம், மற்றும், உலகமயமாக்கப்பட்ட கலாச்சாரம் ஆகியவற்றின் பின்னணியில், நமக்குப் பயன்படும் மறைக்கல்வித் தொகுப்பை, ஜூன் 25, இவ்வியாழனன்று, திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மறைக்கல்வித் தொகுப்பு,  இவ்வியாழன் காலை 11.30 மணிக்கு, வத்திக்கான் '2ம் ஜான் பால்' அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய மறைக்கல்வித் தொகுப்பு வெளியீடு

3 பகுதிகளையும், 12 பிரிவுகளையும் கொண்ட இந்த தொகுப்பை, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Rino Fisichella மற்றும், இந்த அவையின் செயலர், பேராயர் Octavio Ruiz Arenas ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டனர்.

1971ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் வெளியிடப்பட்ட மறைக்கல்வித் தொகுப்புக்களில், இன்றையச் சூழலுக்கு ஏற்ற மாற்றங்களைப் புகுத்தி, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை உருவாக்கியிருந்த இந்தப் புதியத் தொகுப்பினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அங்கீகரித்தார்.

"திருஅவையின் மறைபரப்புப்பணியில் மறைக்கல்வி"

"திருஅவையின் மறைபரப்புப்பணியில் மறைக்கல்வி" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பகுதியில், நமது நம்பிக்கைக்கு சாட்சிகளாக விளங்கும் வகையில், மறைக்கல்வி ஆசிரியர்களை உருவாக்கும் வழிகள் கூறப்பட்டுள்ளன.

மறைக்கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் இவ்வாசிரியர்கள், தங்களிடம் கற்போருடன் பணிவுடன் பயணித்து, தாங்கள் சொல்லித்தரும் மறையின் உண்மைகளை தங்கள் வாழ்வால் பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை இப்பிரிவு வலியுறுத்துகிறது.

"மறைக்கல்வி வழிமுறைகள்"

"மறைக்கல்வி வழிமுறைகள்" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாம் பிரிவில், மறைக்கல்வியின் ஆரம்பம், குடும்பங்களில் நிகழவேண்டும் என்றும், பெற்றோர், மற்றும், முதியோரின் சாட்சிய வாழ்வு, குழந்தைகளை, கிறிஸ்தவ மறையில் வளர்க்க உதவும் தலைசிறந்த கருவி என்றும் கூறப்பட்டுள்ளது.

வரவேற்றல், அனைவரையும் உள்ளடக்குதல், அவரவர் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை, மறைக்கல்வி வழிமுறைகளின் முக்கிய அம்சங்கள் என்று கூறும் இப்பகுதியில், நாடுவிட்டு நாடு குடிபெயர்ந்து வாழ்வோரை, எவ்வாறு மறைக்கல்வி முறைகளில் இணைப்பது என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது.

"தனிப்பட்ட தலத்திருஅவைகளில் மறைக்கல்வி"

"தனிப்பட்ட தலத்திருஅவைகளில் மறைக்கல்வி" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள மூன்றாம் பிரிவில், ஒவ்வொரு பங்கிலும் வளர்க்கப்படும் குழும உணர்வு, மறைக்கல்வியை வளர்க்கும் முக்கிய சூழல் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சொல்லித்தரப்படும் மறைக்கல்விப் பாடங்கள், நிறுவனம் என்ற மனநிலையிலிருந்து, மாணவ, மாணவியரை, சமுதாயக் குழுமம் என்ற மனநிலைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று இப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு, உரையாடல்

2020ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய மறைக்கல்வி தொகுப்பில், யூதர்களோடும், இஸ்லாமியரோடும் நாம் மேற்கொள்ளவேண்டிய உரையாடல், மற்றும், ஏனைய கிறிஸ்தவர்களோடு கொள்ளவேண்டிய ஒன்றிப்பு ஆகிய அம்சங்கள் சிறப்பான பகுதிகளாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அயலவரை தீர்ப்பிடும் மனநிலையை விடுத்து, அவர்களை சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்குதல், நம் சுற்றுச்சூழல் குறித்த மனமாற்றத்தை பெறுதல் ஆகிய எண்ணங்களும் இந்த புதிய தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறப்பான பகுதிகள்.

25 June 2020, 14:12