தேடுதல்

Vatican News
கொரோனா தொற்றுநோயையொட்டி வெனிசுவேலாவில் புலம்பெயர்ந்த மக்கள் கொரோனா தொற்றுநோயையொட்டி வெனிசுவேலாவில் புலம்பெயர்ந்த மக்கள் 

மனித வர்த்தகத்திற்கு பெருமளவில் பலியாகும் குழுவினர்

மனித வர்த்தகத்திற்கு பெருமளவு பலியாகும் புலம்பெயர்ந்தோர், இந்த கோவிட் 19 நெருக்கடி காலத்தில் அந்தக் கொடுமையை இன்னும் அதிக அளவில் உணர்கின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக மக்களில், நாடுகளுக்கிடையிலும், நாட்டிற்குள்ளும் புலம் பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர், மனித வர்த்தகத்திற்கு பெருமளவில் பலியாகும் குழுவினர் என்று, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணியின் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், ஒரு பகுதியாக செயல்படும் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறை அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மனித வர்த்தகத்திற்கு பெருமளவு பலியாகும் புலம்பெயர்ந்தோர், இந்த கோவிட் 19 நெருக்கடி காலத்தில் அந்தக் கொடுமையை இன்னும் அதிக அளவில் உணர்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

"நாம் அனைவரும் ஒரே மனித குடும்பமாக இணைந்தால் மட்டுமே இன்றைய நெருக்கடி நிலையிலிருந்து மீளமுடியும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறை தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டுள்ள மக்களின் உண்மையான புள்ளி விவரங்களை வழங்குதல், புலம் பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருக்கு புகலிடம் வழங்குதல், அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்தல் ஆகியவை குறித்த விவரங்கள் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

புலம் பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருக்கு பணிகள் ஆற்றும் பல்வேறு துறவு சபையினர், மற்றும் பிறரன்பு அமைப்பினரின் அண்மைய முயற்சிகள் குறித்தும் கூறும் இவ்வறிக்கை, சமுதாயத்தால் பொதுவாக மறக்கப்பட்டுள்ள இம்மக்களைக் குறித்த சரியான தகவல்களை தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

03 June 2020, 15:21