தேடுதல்

Vatican News
வத்திக்கான் அருங்காட்சியக மேல்பகுதி வத்திக்கான் அருங்காட்சியக மேல்பகுதி   (AFP or licensors)

மருத்துவப்பணியாளர்களுக்கு திருப்பீடம் காட்டும் நன்றி அடையாளம்

இத்தாலியில், கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், மக்களுக்குப் பணியாற்றிய அனைத்து மருத்துவப்பணியாளர்களுக்கும் நன்றியை வெளிப்படையாக காட்ட விரும்பும் வத்திக்கான்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 நெருக்கடி காலத்தின்போது, மக்களுக்காக சேவை புரிந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும், ஏனைய தன்னார்வப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வத்திக்கான் அருங்காட்சியகம், அப்போஸ்தலிக்க அரண்மனை, திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் ஆகியவற்றை, இலவசமாகப் பார்வையிடும் அனுமதியை, அவர்களுக்கு வழங்கியுள்ளது திருப்பீடம்.

கொரோனா நெருக்கடி காலத்தில் இரண்டு மாதங்களுக்குமேல் மூடப்பட்டிருந்த வத்திக்கான் அருங்காட்சியகமும், அப்போஸ்தலிக்க மாளிகையில், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களும், இம்மாதம் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் வாரம், ஜூன் 8ம் தேதி திங்கள் முதல், 13ம் தேதி சனிக்கிழமை வரை, அனைத்து மருத்துவப்பணியாளர்களுக்கும் இலவசமாகத் திறந்து விடப்படும்.

அதேவேளை, இவ்வாரம் 6ம் தேதிமுதல் பொதுமக்களுக்கென திறக்கப்படவுள்ள, திருத்தந்தையரின் காஸ்தெல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்திலும் அதன் தோட்டங்களிலும், இவ்வாரம் 6, மற்றும் 7 தேதிகளிலும், வரும் வாரம் 13, மற்றும், 14 தேதிகளிலும், மருத்துவப்பணியாளர்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

2,33,000 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டும், 33,500க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்தும் உள்ள இத்தாலியில், தியாக உணர்வுடன், இந்த நெருக்கடி வேளையில் பணியாற்றிய அனைத்து மருத்துவப்பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த அனுமதியை திருப்பீடம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் முழு அடைப்புக் காலத்தின்போது, பலமுறை, தன் திருப்பிலிகளிலும், தன் உரைகளிலும், மருத்துவப்பணியாளர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

04 June 2020, 14:21