தேடுதல்

Vatican News
தன் சகோதரரைப் பார்க்கச் சென்ற முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் சகோதரரைப் பார்க்கச் சென்ற முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்   (ANSA)

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நோயுற்ற சகோதரரின் அருகில் இருக்க...

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மனியில் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் தங்கியிருப்பார் என்று, திருப்பீடத் தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜெர்மனியில் நோயுற்றுள்ள தன் உடன்பிறப்பான அருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களைப் பார்ப்பதற்காக, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், வத்திக்கானில் பணியாற்றும் ஒரு சிறிய குழுவுடன் அந்நாடு சென்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தனிப்பட்ட உதவியாளர், பேராயர் Georg Gänswein, வத்திக்கான் காவல்துறையின் உதவித்தலைவர், திருத்தந்தையை பராமரிக்கும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும், உடன்உழைப்பாளர்களுடன், நோயுற்றிருக்கும் தன் சகோதரர், அருள்திரு ஜார்ஜ் அவர்களுடன் இருப்பதற்காக, Regensburg நகருக்குச் சென்றுள்ளார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வருகை பற்றி அறிக்கை வெளியிட்ட Regensburg மறைமாவட்டம், ஜூன் 18, இவ்வியாழன் பகல் 11.45 மணிக்கு Munich நகர் சென்ற திருத்தந்தையை, Regensburg மறைமாவட்ட ஆயர் Rudolf Voderholzer அவர்கள் வரவேற்று, அம்மறைமாவட்டத்தின் அருள்பணித்துவ கல்லூரிக்கு அழைத்துச்சென்றார் என்று கூறியுள்ளது.

இந்நிகழ்வு, முற்றிலும் தனிப்பட்டது என்பதால், யாரும் தங்களைச் சந்திப்பதற்கு முயற்சிக்கவேண்டாம் என்று, முன்னாள் திருத்தந்தையும் அவரது சகோதரரும் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று மறைமாவட்ட அறிக்கை கூறுகிறது.  

திருத்தந்தையின் ஜெர்மனி பயணம் பற்றி அறிவித்த, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மனியில் எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலம் தங்கியிருப்பார் என்று அறிவித்துள்ளார்.

96 வயது நிரம்பிய அருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர் அவர்களுக்கும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், மூன்று வயது வித்தியாசம் உள்ளது.

19 June 2020, 14:22