தேடுதல்

Vatican News

"பணியாற்றுவதற்காக அருகில் இருத்தல்" - காணொளி

சியேரா லியோன் என்ற நாட்டில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட டிஜான் என்ற இளையவர், தன் இல்லத்தையும், குடும்பத்தையும் விட்டு கட்டாயமாக வெளியேறிச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் காணொளி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள 106வது குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி, திருப்பீடத்தின் குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் துறையைச் சேர்ந்தவர்கள், ஒரு காணொளித் தொகுப்பை, ஜூன் 18 இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளனர்.

"பணியாற்றுவதற்காக அருகில் இருத்தல்" (“To be close in order to serve”) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் குறும்படம், “இயேசு கிறிஸ்துபோன்று, தப்பித்து ஓடுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டு”(“Forced like Jesus Christ to flee”) என்ற தலைப்பில், திருத்தந்தை வெளியிட்டுள்ள 106வது குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் செய்தியை மையப்படுத்தி அமைந்துள்ளது.

சியேரா லியோன் என்ற நாட்டில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட டிஜான் (Tijan) என்ற இளையவர் தன் இல்லத்தையும் குடும்பத்தையும் விட்டு. கட்டாயமாக வெளியேறிச் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வேளை, திருத்தந்தையின் செய்தியிலிருந்து ஒரு சில வரிகள், இந்தக் காணொளித் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

1996ம் ஆண்டு தன் 6வது வயதில் அடைந்த துயரங்களை விவரிக்கும் டிஜான் அவர்கள், தானும், தன்னைப்போன்ற பல குழந்தைகளும், எவ்வாறு அருள் சகோதரிகளால் காப்பாற்றப்பட்டு, கரைசேர்க்கப்பட்டனர் என்பதை இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.

மே 15ம் தேதி, திருத்தந்தை தன் உலகச் செய்தியை வெளியிட்ட வேளையில், திருப்பீடத்தின் குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் துறை, முதல் காணொளித் தொகுப்பை வெளியிட்டதுபோல், தற்போது, இரண்டாவது காணொளித் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

18 June 2020, 14:51