தேடுதல்

Vatican News
அமேசான் அமேசான்  (AFP or licensors)

Laudato si' திருமடலையொட்டி, திருப்பீடத் துறைகளின் இணை அறிக்கை

திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் இணைந்து உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த இயற்கைசார்பியல் குழுவுடன், உலகின் பல்வேறு ஆயர் பேரவைகளும், ஏனைய கத்தோலிக்க அமைப்புக்களும் இணைந்து, ஓர் அறிக்கையை உருவாக்கியுள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலையும், நாம் வாழும் பூமிக்கோளத்தையும் காக்கும் ஒரு முயற்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய Laudato si' திருமடல் வெளியிடப்பட்டதன் 5ம் ஆண்டு நிறைவையொட்டி, திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் இணைந்து, ஜூன் 18 இவ்வியாழனன்று அறிக்கையொன்றை வெளியிட்டது.

அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில்...

"நம் பொதுவான இல்லத்தைக் காக்கும் வழியில் - Laudato si' ஐந்தாண்டுகளுக்குப் பின்" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் செயலர், கத்தோலிக்க கல்வி பேராயத்தின் செயலர், உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்ஸியஸ் ஜான் உட்பட, பல திருப்பீட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் இணைந்து உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த இயற்கைசார்பியல் குழுவுடன், உலகின் பல்வேறு ஆயர் பேரவைகளும், ஏனைய கத்தோலிக்க அமைப்புக்களும் இணைந்து, இவ்வறிக்கையை உருவாக்கியுள்ளன.

படைப்பு அனைத்தும் தொடர்பு கொண்டுள்ளன

கோவிட் 19 நெருக்கடி நிலை உருவாவதற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கை, உலகில், படைப்பு அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன என்பதையும், எந்த ஒரு பகுதியிலும் ஏற்படும் ஒரு நெருக்கடி, அனைத்தையும் பாதிக்கும் என்பதையும் கூறியுள்ளது.

சுற்றுச்சூழலியல் சார்ந்த ஒரு மனமாற்றம்

சுற்றுச்சூழலியல் சார்ந்த ஒரு மனமாற்றம் நம் அனைவருக்கும் தேவை என்பதை வலியுறுத்தும் இவ்வறிக்கையின் முதல் பகுதி, பழம்பெரும் ஆழ்நிலை தியானங்கள் இந்த மனமாற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது.

பழமை வாய்ந்த துறவு முறைகள் பயன்படுத்திய, ஆழ்நிலை தியானம், செபம், வேலை, பிறருக்கு உதவி என்ற நான்கு நிலைகள், இன்றைய உலகிற்கு மிகவும் தேவையானவை என்பது, இப்பகுதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமது பொதுவான இல்லமான பூமியைக் காப்பது, கிறிஸ்தவ வாழ்வின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி என்பதைச் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, நம் பூமியைக் காக்கும் முயற்சியில், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல்கள் இன்றியமையாதவை என்று கூறியுள்ளது.

வீணாக்கும், தூக்கியெறியும் கலாச்சாரம்

இவ்வுலகின் வளங்கள் வீணாக்கப்படுவது குறித்து சிந்திக்கும் இவ்வறிக்கையின் அடுத்த பகுதியில், பசித்திருப்போரின் எண்ணிக்கை கூடிவரும் இவ்வுலகில் வீணாக்கப்படும் உணவின் அளவும் கூடிவருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஓர் உண்மை என்ற கருத்து பதிவாகியுள்ளது.

தூக்கியெறியும் கலாச்சாரத்தைக் குறித்து பேசும் இப்பகுதியில், உலகின் பொருளாதாரம், உற்பத்தி துறை, வர்த்தகத் துறை ஆகிய பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மனிதரையும், மனிதரின் முழு ஆளுமையையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் முன்னேற்றத் திட்டங்களைக் குறித்து இப்பகுதியில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

இவ்வறிக்கையின் இறுதிப் பகுதியில், Laudato si' திருமடலை கருத்தில் கொண்டு திருப்பீடத்தின் அனைத்து துறைகளிலும், வத்திக்கான் அரசிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசுழற்சி திட்டங்கள், இயற்கை சக்திகளின் பயன்பாடு, கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல் ஆகிய முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.

18 June 2020, 14:36