தேடுதல்

Vatican News
Human brotherhood அமைப்பின் பிரதிநிதிகள், ஐ.நா. பொதுச்செயலருடன் Human brotherhood அமைப்பின் பிரதிநிதிகள், ஐ.நா. பொதுச்செயலருடன்   (ANSA)

அபு தாபியிலிருந்து அமேசானுக்கு மனிதாபிமான உதவிகள்

அமேசானில் வாழும் மக்கள், கோவிட் 19 நெருக்கடி நிலையைச் சமாளிக்க உதவியாக, 50 டன் எடையுள்ள மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருப்பீடத்தின் கத்தோலிக்க கல்வி பேராயமும், ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து, பெரு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் அமேசானில் வாழும் மக்கள், கோவிட் 19 நெருக்கடி நிலையைச் சமாளிக்க உதவியாக, 50 டன் எடையுள்ள மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளன.
திருப்பீடத்தின் பேராயமும், ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து உருவாக்கியுள்ள Gravissimum Educationis என்றழைக்கப்படும் பாப்பிறை அறக்கட்டளை வழியே அனுப்பப்படும் இந்த உதவி, ஜூன் 25, இவ்வியாழனன்று, அபு தாபியிலிருந்து பெரு நாட்டின் லீமா நகரை வான்வழியே அடைந்து, அங்கிருந்து, சாலைவழியே அமேசான் பகுதி மக்களைச் சென்றடைகிறது.
தற்போதையச் சூழலில், கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கம் மையம்கொண்டுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில், அமேசான் பகுதி மக்கள் அதிக அளவில் தாக்கப்படக்கூடும் என்பதால், அவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், கையுறைகள், சுவாசக்கருவிகள், மருந்து மற்றும் உணவுப்பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உலகெங்கும் பரவியுள்ள இந்தக் கொள்ளை நோய், அமேசான் பகுதியில் வாழும் மக்களுக்கு வெறும் நலவாழ்வுப் பிரச்சனையை மட்டுமின்றி, வறுமை என்ற பிரச்சனையையும் கொணர்ந்துள்ளது என்று, Gravissimum Educationis அறக்கட்டளையின் செயலர், அருள்பணி Monsignor Guy-Réal Thivierge அவர்கள் கூறினார்.
 

25 June 2020, 14:16