தேடுதல்

Vatican News
இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்களின் 94வது பிறந்தநாள் கொண்டாட்டம் இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்களின் 94வது பிறந்தநாள் கொண்டாட்டம்  (AFP)

கோவிட் 19 நிலையையும் கடந்து துறவியரின் திட்டங்கள்

இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்களின் 94வது பிறந்தநாளையொட்டி, பிரித்தானியா தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு மெய் நிகர் தேநீர் விருந்தில், 120க்கும் மேற்பட்ட கத்தோலிக்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 13, கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்களின் 94வது பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருப்பீடத்தில் பணியாற்றும் பிரித்தானியா தூதரகம், ஜூன் 16, இச்செவ்வாய் மாலையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு மெய் நிகர் தேநீர் விருந்தில், 120க்கும் மேற்பட்ட கத்தோலிக்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரித்தானியாவின் சார்பில் திருப்பீடத்திற்குத் தூதராகப் பணியாற்றும் Sally Axworthy அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த தேநீர் விருந்தில், பிரித்தானியாவின் வெளிநாட்டு உறவுகள் துறையின் உயர் அதிகாரி, Lord Ahmad அவர்கள் பிரித்தானியா அரசின் சார்பில், இலண்டன் மாநகரிலிருந்து இணையத்தளம் வழியே பங்கேற்றார்.

இத்தேனீர் விருந்தின் துவக்கத்தில் பேசிய Ahmad அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளுக்கு, குறிப்பாக, கோவிட் 19 நெருக்கடி காலத்தில், தங்கள் உயிரையும் பணயம்வைத்து பணியாற்றிவரும் கத்தோலிக்கப் பணியாளர்களுக்கு நன்றி கூறினார்.

மனித வர்த்தகம், இன்றைய உலகில் நிலவும் பல்வேறு அடிமை நிலைகள், மற்றும் மத உரிமை ஆகிய பிரச்சனைகளில், கத்தோலிக்கத் திருஅவையுடன் பிரித்தானிய அரசும் இணைந்து பணியாற்றுவது குறித்து Ahmad அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.

உலகளாவிய பெண் துறவிகள் அமைப்பின் தலைவர், அருள்சகோதரி, Jolanta Kafka அவர்கள் பேசுகையில், உலகெங்கிலும், கத்தோலிக்கப் பெண் துறவிகள், மிகக் கடினமானச் சூழல்களில் ஆற்றிவரும் பணிகளைப்பற்றி குறிப்பிட்டு, இத்தகையப் பணிகள் இனியும் தொடரும் என்று உறுதியளித்தார்.

அருள்சகோதரி, Jolanta Kafka அவர்களின் உரையைத் தொடர்ந்து, ஆண் துறவிகள் அமைப்பின் உலகத்தலைவராகப் பணியாற்றும், இயேசு சபையின் தலைவர், அர்த்தூரோ சோசா அவர்கள் பேசிய வேளையில், துறவியரின் பணிகள், கோவிட் 19 நெருக்கடி நிலையையும் கடந்து திட்டமிடப்பட்டு வருவதைக் குறிப்பிட்டார்.

இந்தத் தொற்றுக்கிருமியினால் உருவான நெருக்கடி நிலை, உலகின் பல துறைகளில் நிலவிவரும் அநீதிகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் உணரவைத்துள்ளது என்றும், இவற்றை நீக்குவதற்கு, நீடித்ததொரு தீர்வைக் காண்பது, துறவியருக்கு முன்னிருக்கும் சவால் என்றும், சோசா அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த மெய் நிகர் தேநீர் விருந்து நிகழ்வில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், இறுதியாகப் பேசிய வேளையில், திருஅவை, போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்திய உருவகத்தை நினைவு கூர்ந்தார்.

தற்போதைய உலகை, ஒரு போர்க்களமாக மாற்றியுள்ள கோவிட் 19 கொள்ளைநோய்க்கு, தகுந்த ஒரு பதிலிறுப்பாக, திருத்தந்தையின் தூண்டுதலால் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், இனிவரும் காலங்களில் திறம்படச் செயலாற்றும் என்று, பேராயர் காலகர் அவர்கள் உறுதியளித்தார்.

17 June 2020, 15:40