தேடுதல்

Vatican News
கீவ் நகரில் கைப்பற்றப்பட்ட நெகிழிப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டாலர்கள் கீவ் நகரில் கைப்பற்றப்பட்ட நெகிழிப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டாலர்கள்  

கோவிட்-19க்கு மத்தியில் இடம்பெறும் ஊழல் ஒழிக்கப்பட..

ஊழல், தனிமனிதரின் மாண்பை இழிவுபடுத்துகின்றது, ஊழல் என்ற புற்றுநோயின் பல்வேறு வடிவங்களை ஒழிப்பதற்கு உலக சமுதாயம் முழுவதும், உறுதியாக தன்னை அர்ப்பணிக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 உருவாக்கியுள்ள இந்த நெருக்கடி காலத்தில், சமுதாயம், பொருளாதாரம், மற்றும், சுற்றுச்சூழலில் இடம்பெறும் மாற்றங்களை, தெளிவாக அறியத்தொடங்கியுள்ள நாம், இதே காலத்தில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதிலும் மிகுந்த அக்கறை காட்டவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐரோப்பிய அவை ஒன்றிடம்  வலியுறுத்தியுள்ளார்.

OCSE எனப்படும், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அருள்பணி யானுஸ் உர்பான்சிஸ்க் (Janusz Urbańczyk) அவர்கள், ஜூன் 15, இத்திங்களன்று, அந்த அவை, இணையதளம் வழியாக நடத்திய, 28வது, பொருளாதார மற்றும், சுற்றுச்சூழல் கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

OSCE அவையின் விழுமியங்களுக்கும், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும், மனிதரின் பல்வேறு கூறுகளுக்கும், ஊழல், பெரிய அளவில் அச்சுறுத்தலை முன்வைக்கின்றது என்பதை கவனத்தில் இருத்தி, நல்ல ஆட்சிமுறையில் அக்கறை காட்டவேண்டும் என்று அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அறநெறி மற்றும், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்குகையில், ஊழல், விரைவான மற்றும், எளிய இலாபங்களைக் கொணரும் ஒரு மாயத்தோற்றத்தை வழங்குகிறது என்று கூறிய, அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், உண்மையில், இது ஒருவர் ஒருவர் மீதுள்ள நம்பிக்கையை குறைக்கின்றது, அனைவரையும் புண்படுத்துகிறது, ஒளிவுமறைவற்றதன்மையைக் குலைக்கிறது, மற்றும், சட்ட மற்றும் சமுதாய அமைப்புமுறையின் நம்பகத்தன்மையையே சந்தேகத்திற்கு உட்படுத்துகின்றது என்று கூறினார்.

ஊழல், தனிமனிதரின் மாண்பை இழிவுபடுத்துகின்றது, நன்மையும், அழகும் நிறைந்த அனைத்து இலட்சியங்களையும் சிதைக்கின்றது, ஊழல் என்ற புற்றுநோயின் பல்வேறு வடிவங்களை ஒழிப்பதற்கு, உலக சமுதாயம் முழுவதும் உறுதியாக தன்னை அர்ப்பணிக்கவேண்டும் என்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றை குறிப்பிட்டு உரையாற்றிய அருள்பணி உர்பான்சிஸ்க் அவர்கள், பொது நிர்வாகத்தில் உள்ளவர்கள், நேர்மை மற்றும் ஒளிவுமறைவற்றதன்மையுடன் செயல்படவேண்டியதன் கடமையை வலியுறுத்தினார்.

புதுமை படைத்தல், ஒளிவுமறைவற்றதன்மை, மற்றும், டிஜிட்டல் உலகின் வழியாக, ஊழலைத் தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும், இவ்வாறு செயல்படுவதன் வழியாக, OCSE அவை, பாதுகாப்பு, நிலையானதன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கமுடியும் என்பது, இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

16 June 2020, 14:36