தேடுதல்

மத்ரித் கத்தோலிக்க கோவிலில் பெண்கள் மத்ரித் கத்தோலிக்க கோவிலில் பெண்கள் 

திருஅவையின் சமுகப்படிப்பினைகள் குறித்த இணையதள வகுப்பு

திருஅவையிலும், பொதுவாழ்விலும், பெண்கள் ஆற்றியுள்ள, மற்றும், ஆற்றிவரும் சிறப்பான பங்கை அங்கீகரிக்கும் விதமாக, நடத்தப்பட உள்ள கருத்துப் பரிமாற்ற வகுப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

'பொது வாழ்வில் பெண்கள் : 21ம் நூற்றாண்டில் பெண்ணியமும், கத்தோலிக்க அடையாளமும்' என்ற தலைப்பில், திருஅவையின் சமூகப்படிப்பினைகள் குறித்த கருத்துப்பரிமாற்ற வகுப்பு, ஜூலை மாதம் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்கத் தலைவர்கள் கழகத்தினால் ஏற்பாடுச் செய்யப்பட்டு, கொரோனா தொற்று நோய் காரணமாக, இணைய தளம் வழியாக நடத்தப்படும் இந்த வகுப்புகளில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 25 கத்தோலிக்கத் தலைவர்களின் பங்களிப்பு இருக்கும்.

திருஅவையிலும், பொதுவாழ்விலும் பெண்கள் ஆற்றியுள்ள, மற்றும், ஆற்றிவரும்  சிறப்புப்பங்கை அங்கீகரிக்கும் விதமாக நடத்தப்பட உள்ள இந்த கருத்துப் பரிமாற்றம், புதிய பெண்ணியம் குறித்த தெளிவான கிறிஸ்தவ அடையாளத்தை முன்வைக்கும் என இதற்கு ஏற்பாடு செய்தோர் அறிவித்துள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரையில், சமூகத்தில் நிலவும் சரிநிகரற்ற தன்மைகள், உரிமைமீறல்கள், அவர்களின் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளப்படாமை போன்றவைகள், விவிலிய மதிப்பீடுகளுடன் ஆராயப்பட்டு, நிலைமைகளைச் சரிசெய்வதற்குரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா, மற்றும், அமெரிக்காவில் உள்ளோர் பங்குபெற உதவும் வகையில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த இணையதள, ஐந்து நாள் வகுப்புகளின் இறுதியில், இலத்தீன் அமெரிக்காவின் 4 கத்தோலிக்க பல்கலைக்கழகங்களும், இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க தலைவர்கள் கழகமும் இணைந்து, சான்றிதழ்களை வழங்குவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2020, 14:08