தேடுதல்

Vatican News
உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்சியஸ் ஜான் உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்சியஸ் ஜான்  

காரித்தாஸ் - Laudato si’ உணர்வில் ஒருங்கிணைந்த சூழலியல்

கோவிட்-19 கொள்ளைநோயின் எதிர்விளைவுகள், ஐ.நா. நிறுவனத்தால் அமைக்கப்பட்ட நீடித்த-நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் முயற்சிகளில் பின்னடைவை உருவாக்கியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வேளாண்மையில் வேதிய உரங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் கடும் விளைவுகள் பற்றி, இந்திய காரித்தாஸ் மற்றும், ஆசிய காரித்தாஸ் அமைப்புகள், குறுநில விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வையும், அவை குறித்த தெளிவான அறிவையும் உருவாக்கி வருகின்றன என்று, உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்சியஸ் ஜான் அவர்கள் கூறினார்.

சுற்றுச்சூழலையும், நாம் வாழும் பூமிக்கோளத்தையும் காக்கும் ஒரு முயற்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய Laudato si' திருமடல் வெளியிடப்பட்டதன் 5ம் ஆண்டு நிறைவையொட்டி, திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் இணைந்து, ஜூன் 18 இவ்வியாழனன்று அறிக்கையொன்றை வெளியிட்டன.

"நம் பொதுவான இல்லத்தைக் காக்கும் வழியில் - Laudato si' ஐந்தாண்டுகளுக்குப் பின்" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அலாய்சியஸ் ஜான் அவர்கள், Laudato si’ திருமடலால் உந்தப்பட்டு, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காரித்தாஸ் அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின், பல்வேறு தேசிய அமைப்புகள் ஆற்றிவரும் பணிகள் பற்றி எடுத்துரைத்த ஜான் அவர்கள், Burkina Faso நாட்டில், குடிதண்ணீர் எல்லா மக்களுக்கும் கிடைப்பதற்கு வழியமைத்து வருவதாகக் கூறினார்.

சூழலியல் மனமாற்றம்

அனைவருக்கும் உணவு கிடைப்பதற்கு உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தி, உலக காரித்தாஸ் அமைப்பு, 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை, "ஒரே மனிதக் குடும்பம், அனைவருக்கும் உணவு" என்ற தலைப்பில் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியும் ஜான் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த நடவடிக்கையில் அனைத்து உள்ளூர் திருஅவைகளும் கலந்துகொண்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அனைவருக்கும் மனமாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்தின என்றும் ஜான் அவர்கள் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோய்

கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்குத் தேவையான, உணவு, குடியிருப்பு, மற்றும், நலவாழ்வு சார்ந்த மனிதாபிமான உதவிகளை காரித்தாஸ் அமைப்புகள் ஆற்றிவருகின்றன என்றும், இக்கொள்ளைநோயின் எதிர்விளைவுகள், ஐ.நா. நிறுவனத்தால் அமைக்கப்பட்ட நீடித்த-நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டும் முயற்சிகளில் பின்னடைவை உருவாக்கியுள்ளன என்றும் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இறைவா உமக்கே புகழ் என்று பொருள்படும் Laudato si' திருமடல் வெளியிடப்பட்டு, ஜூன் 18, இவ்வியாழனோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

உலக காரித்தாஸ் அமைப்பு, 162 தேசிய அமைப்புக்களைக் கொண்டுள்ளது. 

19 June 2020, 14:39