தேடுதல்

Vatican News
LOS ANGELESல் போராட்டம் LOS ANGELESல் போராட்டம் 

மார்ட்டின் லூத்தர் கிங் காட்டிய வழியில் போராட அழைப்பு

போராட்டங்கள் வெடித்துள்ள அனைத்து நகரங்களிலும் பல்வேறு கிறிஸ்தவ மற்றும் பல்வேறு சமய சகோதரர், சகோதரிகளுடன் இணைந்து, ஒப்புரவும் மன்னிப்பும் வளர்வதற்கு ஆயர்கள் செபக்கூட்டங்களை ஏற்பாடு செய்வது உதவியாக இருக்கும் – கர்தினால் பீட்டர் டர்க்சன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இனவெறி என்பது அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் நிலவும் அநீதி அல்ல, அது, தென் ஆப்ரிக்காவில் இருந்தது, இன்னும் பல நாடுகளில், சாதிய அநீதியாக, பழங்குடியினருக்கு எதிரான அநீதியாக தொடர்ந்துவருகிறது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Minneapolis நகரில் ஆப்ரிக்க அமெரிக்கரான George Floyd அவர்கள் கொலையுண்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் பரவியுள்ள போராட்டங்கள் குறித்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், பல்வேறு வழிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிலவும் சமுதாயப் பாகுபாடுகள் குறித்து பேசினார்.

மக்களின் நியாயமான விரக்தி

தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியுள்ள போராட்டங்கள், பல ஆண்டுகளாக அவமானத்தையும், பாகுபாட்டையும் உணர்ந்துவரும் மக்களின் நியாயமான விரக்தியின் வெளிப்பாடு என்று, அந்நாட்டு ஆயர்கள் குறிப்பிட்டிருப்பதை, தன் பேட்டியில் ஏற்றுக்கொண்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், அனைத்து மனிதரும் மாண்புடையவர்கள் என்பதை திருஅவை மீண்டும் வலியுறுத்த விழைகிறது என்று கூறினார்.

மார்ட்டின் லூத்தர் கிங் காட்டிய வழியில்...

வன்முறையற்ற, போராட்டங்கள் இடம்பெறவேண்டும் என்று, George Floyd அவர்களின் சகோதரர் விண்ணப்பித்திருப்பதைக் குறித்து கேள்வி எழுந்தபோது, அவரது கூற்றை கத்தோலிக்கத் திருஅவை முற்றிலும் ஆதரிக்கிறது என்று கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வன்முறையற்ற போராட்டங்களுக்கு மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த போராட்டங்கள், உலகிற்கே சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டினார்.

எத்தனை போராட்டங்கள் நிகழ்ந்தாலும், ஜார்ஜ் அவர்கள் மீண்டும் உயிரோடு திரும்பப்போவதில்லை என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், இறைவனுக்கு முன், ஜார்ஜ் அவர்கள் நிற்கும்போது, தன்னைக் கொலை செய்தவர்களை மன்னிக்கும் நிலையில் அவர் இருக்கும்படியாக, நாம் வேண்டிக்கொள்வது, அவருக்கு நாம் செய்யும் பெரும் உதவி என்று கூறினார்.

ஒப்புரவும் மன்னிப்பும் வளர்வதற்கு செபக்கூட்டங்கள்

போராட்டங்கள் வெடித்துள்ள அனைத்து நகரங்களிலும் பணியாற்றும் ஆயர்களுக்கு தான் ஒரு வேண்டுகோளை விடுக்க விழைவதாகக் கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்நகரங்களில் உள்ள பூங்கா மற்றும் சதுக்கங்கள் போன்ற பொதுவான இடங்களில், பல்வேறு கிறிஸ்தவ மற்றும் பல்வேறு சமய சகோதரர், சகோதரிகளுடன் இணைந்து, அந்நாட்டில், ஒப்புரவும் மன்னிப்பும் வளர்வதற்கு ஆயர்கள் செபக்கூட்டங்களை ஏற்பாடு செய்வது உதவியாக இருக்கும் என்று கூறினார்.

03 June 2020, 14:44