தேடுதல்

Vatican News
நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே 

நற்செய்தி அறிவிப்புப்பணியின் மொழி பிறரன்பு - கர்தினால் தாக்லே

அருள்பணியாளர்களை உருவாக்கும் பயிற்சியில், பிறரன்புச் செயல்கள் ஆற்றுப்படுவடுவதை ஊக்குவிக்கவேண்டும் - கர்தினால் தாக்லே

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இக்காலத்தில் நற்செய்தி அறிவிப்பிற்கு, மாபெரும் இறையியல் விளக்கங்கள் அல்ல, மாறாக, பிறரன்பு என்ற மொழியே, மனித சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்றது என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

உரோம் நகரிலுள்ள வின்சென்ட் தெ பவுல் துறவு சபையின் தலைமையகத்தை அண்மையில் பார்வையிட்ட கர்தினால் தாக்லே அவர்கள், அச்சபையின் தனிவரமும், நற்செய்தி அறிவிப்புப்பணியின் அன்புமொழியும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளன என்று கூறினார்.

அச்சபையின் உறுப்பினர்களுக்கு உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், இன்றைய நற்செய்தி அறிவிப்புக்குத் தேவையான மூன்று முக்கிய கூறுகள் மற்றும், பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

மற்றவர்களிடம் பிறரன்பைத் தூண்டுபவர்களாகச் செயல்படுதல், குழுமங்களை உருவாக்கும் பிறரன்பில் ஈடுபடுதல், அருள்பணியாளர்களை உருவாக்கும் பயிற்சியில், பிறரன்புச் செயல்கள் ஊக்குவிக்கப்படுதல் ஆகிய மூன்று கூறுகள் குறித்து, கர்தினால் தாக்லே அவர்கள் விளக்கிக் கூறினார்.

புதியவழியில் நற்செய்தி அறிவிப்புப்பணி ஆற்றுவது பற்றியும் விளக்கிய கர்தினால் தாக்லே அவர்கள், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது குறித்துப் பேசும் திருத்தந்தையின் Laudato Sì திருமடல், சூழலியலை விளக்கும் ஏடு அல்ல, மாறாக, அது, திருஅவையின் கோட்பாடு குறித்தது என்று கூறினார்.

இந்த விவகாரங்களில், ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்கள் மத்தியில்கூட போதுமான அளவு ஆர்வம் காட்டப்படவில்லை என்றும், கிறிஸ்தவர்கள், படைப்பு மற்றும், கடவுளின் வேலைகளைப் பாதுகாப்பதுபற்றிப் பேசுகையில், அவை அவர்களுக்கு, இயற்கை அல்லது சுற்றுச்சூழல் என்பதோடு மட்டும் நின்றுவிடுகின்றன என்றும், கூறினார், கர்தினால் தாக்லே. (Fides)

27 June 2020, 13:32