தேடுதல்

Vatican News
திருத்தந்தை புனித  23ம் யோவான் கிறிஸ்தவ சபையினருடன் திருத்தந்தை புனித 23ம் யோவான் கிறிஸ்தவ சபையினருடன் 

கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவைக்கு வயது அறுபது

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 1995ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி, “Ut unum sint” என்ற திருமடலை வெளியிட்டார். இது, திருத்தந்தை ஒருவரால், கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றி வெளியிடப்பட்ட முதல் திருமடலாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 1960ம் ஆண்டிலிருந்து, பல்வேறு கிறிஸ்தவ சபைகளோடு திருஅவை மேற்கொண்ட பல கலந்துரையாடல்கள், மற்றும், பல சந்திப்புக்கள், நிறைய பலன்களைக் கொணர்ந்துள்ளன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருஅவையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை உருவாக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றிய “Ut unum sint” திருமடல் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜூன் 05, இவ்வெள்ளியன்று, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் (Kurt Koch) அவர்கள், இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை விரும்பும் முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்பு, இன்னும் எட்டப்படவில்லை என்றும், இந்த ஒன்றிப்பு எந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதில் அல்ல, மாறாக, அந்த ஒன்றிப்பு குறித்த ஒப்புதல் தேவைப்படுகின்றது என்பதை தெளிவுபடுத்தினார், கர்தினால் கோக்.

இருந்தபோதிலும், ஒன்றிப்பும், பன்மைத்தன்மையும், கிறிஸ்தவ ஒன்றிப்பில்கூட ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்றும், திருஅவை, ஒன்றிப்பை நிலைநாட்டுவற்கு, தன்னால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளும் என்றும் கூறிய கர்தினால் கோக் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய பாதை, கொடைகளைப் பரிமாறிக்கொள்வதாகும் என்று கூறினார்.  

கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நடைமுறைகளில், பிறரன்பில் உரையாடல், உண்மையில் உரையாடல், ஆன்மீக கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆகிய மூன்றும் முக்கியமான கூறுகள் என்று குறிப்பிட்ட கர்தினால் கோக் அவர்கள், அவை ஒவ்வொன்றையும் குறித்து விளக்கினார்.

பிறரன்பில் உரையாடல் என்பது, பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நட்புறவைக் காப்பது என்றும், இது, கடந்தகால முற்சார்பு எண்ணங்களை மேற்கொள்ள உதவும் என்றும் கூறிய கர்தினால் கோக் அவர்கள், உண்மையில் உரையாடல் என்பது, வரலாறு முழுவதும் பிரிவினைக்குக் காரணமாக அமைந்துள்ள, முரண்பட்ட கேள்விகளுக்கு, இறையியல் முறையில் விளக்கம் சொல்வதாகும் என்று கூறினார்.

ஆன்மீக கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” என்ற இயேசுவின் அருள்பணித்துவ இறைவேண்டலுக்கு ஆழமாக ஒத்திணங்கிச் செல்வதாகும் என்றுரைத்த கர்தினால் கோக் அவர்கள், கடந்த அறுபது ஆண்டுகளில், திருஅவையின் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதையில் இடம்பெற்றுள்ள சவால்கள் மற்றும், முன்னேற்றங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். 

திருத்தந்தையரும், கிறிஸ்தவ ஒன்றிப்பும்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப்பின், திருஅவையின் தலைமைப்பணியை வகித்து வந்த அனைத்து திருத்தந்தையர்களும், தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்குத் திறந்த மனம் உடையவர்களாய், அது சார்ந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர் என்றும், கர்தினால் கர்ட் கோக் அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், 1960ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி, கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்காக, ஒரு செயலகத்தை உருவாக்கினார். அது 1988ம் ஆண்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை என்று பெயரிடப்பட்டது.

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 1995ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி, “Ut unum sint” என்ற திருமடலை வெளியிட்டார். இது, திருத்தந்தை ஒருவரால், கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றி வெளியிடப்பட்ட முதல் திருமடலாகும். கத்தோலிக்கத் திருஅவை கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு, உறுதியுடன் தன்னை அர்ப்பணித்திருப்பதை இந்த திருமடல் விளக்குகிறது.

05 June 2020, 12:36