தேடுதல்

மடகாஸ்கரில் மறைப்பரப்புப் பணியாளர் மடகாஸ்கரில் மறைப்பரப்புப் பணியாளர் 

கிறிஸ்துவும், தூய ஆவியாரும், மறைப்பரப்புப் பணியாளர்களின் சாட்சிகள்

நன்றியுணர்வு, தாழ்ச்சி, மக்களின் வாழ்வோடு நெருக்கமாக இருத்தல், மக்கள் வாழ்கின்ற இடங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தல், சிறியோர் மற்றும், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்தல் - கிறிஸ்தவ மறைப்பரப்புப்பணியின் கூறுகள்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

மே 21, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள செய்தியில், திருஅவையின் மறைப்பணி நடவடிக்கைகளின் உண்மையான வளங்கள் பற்றி, மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார் என்று, வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தி குறித்து கருத்து தெரிவித்த, திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள், திருஅவையின் உண்மையான மறைபரப்புப்பணி இயல்பை உருவிழக்கச்செய்கின்ற மற்றும், திருவருளின் செயலூக்கத்தை மங்கச்செய்கின்ற, பல்வேறு ஆபத்துக்கள் பற்றி, திருத்தந்தை தன் செய்தியில் எச்சரித்துள்ளார் என்று கூறினார்.

மறைபரப்புப்பணி என்பது, உலகம்சார்ந்த எண்ணங்களுடன் செயல்படுவது அல்லது, சிறந்த தொழில்நுட்பங்களைக்கொண்டு ஆற்றுவதன் பலன் அல்ல, மாறாக, ஆண்டவர் நமக்கு வழங்கும் அளவற்ற மகிழ்விலிருந்து பிறப்பதாகும், இது, தூய ஆவியாரின் கனியாகும் என்றும், அச்செய்தியில் திருத்தந்தை விளக்கியுள்ளார் என்று, தொர்னியெல்லி அவர்கள் கூறினார்.

எவரும், தனது தனிப்பட்ட முயற்சியினால் கொடுக்க இயலாத இந்த மகிழ்வே, திருவருள் என்றும், மறைப்பணியாளராக இருப்பது என்பது, நாம் பெற்ற மாபெரும் மற்றும், விலைமதிப்பில்லாத கொடையை பலமுறை பிரதிபலிப்பதாகும் என்று அச்செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதை மனிதக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், யாராவது ஒருவர் ஆற்றியதற்குச் சாட்சிகளாக இருப்பதாகும், இந்த ஓர் உணர்வில் நோக்குகையில் மறைப்பணியாளர்களுக்குச் சாட்சிகளாக இருப்பவர்கள் கிறிஸ்துவும், அவரின் தூய ஆவியும் என்று, திருத்தந்தை விளக்கியுள்ளார் என்று கூறினார், தொர்னியெல்லி.   

நற்செய்தியை அறிவிப்பதும், கிறிஸ்தவ நம்பிக்கையை அறிக்கையிடுவதும், எந்தவித அரசியல், கலாச்சாரம், உளவியல் அல்லது மதமாற்ற நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும் எனவும், உலகில் திருஅவை கவர்ச்சியினால் வளருகின்றது என்றும் அச்செய்தி கூறுகின்றது என்று, கருத்து தெரிவித்துள்ளார், தொர்னியெல்லி.

ஒருவர் இயேசுவைப் பின்பற்றினால், அவரால் கவரப்படுவதில் மகிழ்வடைவார், மற்றவர்களும் அதைக் கவனிப்பார்கள் மற்றும், அவர்கள் வியப்படையவும் செய்வார்கள் என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது. 

நன்றி, நன்றியுணர்வு, தாழ்ச்சி, மக்களின் வாழ்வோடு நெருக்கமாக இருத்தல், மக்கள் வாழ்கின்ற இடங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தல், சிறியோர் மற்றும், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்தல் போன்ற  கிறிஸ்தவ மறைப்பரப்புப்பணியின் சில குறிப்பிடத்தக்க கூறுகளையும், திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறினார், தொர்னியெல்லி. 

இவ்வாண்டு ஆண்டவரின் விண்ணேற்றப்பெருவிழா வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட மே 21ம் தேதியன்று, பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதைய கோவிட்-19 சூழலில் அத்திட்டம் நிறைவேற இயலாமல் இருப்பதால், தன் எண்ணங்களை ஒரு செய்தியின் வழியே அவர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நற்செய்தியின் மகிழ்வு, பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளின் இன்றைய நிலை, தவிர்க்கவேண்டிய தவறுகள், பயணத்திற்குப் பரிந்துரைகள், என்ற பல்வேறு தலைப்புக்களில் இச்செய்தியை திருத்தந்தை வழங்கியுள்ளார் என்று, தொர்னியெல்லி அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2020, 14:50