தேடுதல்

Vatican News
புனித பேதுரு பெருங்கோவில் சுத்தம் செய்யப்படுகிறது புனித பேதுரு பெருங்கோவில் சுத்தம் செய்யப்படுகிறது  (Vatican Media)

உரோம் நகர் பெருங்கோவில்கள் மீள்திறப்பு

உரோம் பெருங்கோவில்களுக்கு வருவோருக்கு காய்ச்சல் இருக்கின்றதா என்று முதலில் பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள், திருவழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் கோவிட்-19 சமுதாய விலகலின் இரண்டாம்கட்ட புதிய விதிமுறைகள் வருகிற வாரத்தில் வெளியிடப்படவுள்ளவேளை, உரோம் நகரிலுள்ள பாப்பிறை பெருங்கோவில்கள் மீண்டும் திறக்கப்படுவது, மற்றும், அக்காலக்கட்டத்தில் கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் குறித்து, அவற்றின் பிரதிநிதிகள், மே 14, இவ்வியாழனன்று கலந்துரையாடினர்.

திருப்பீடச் செயலகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்த பொறுப்பாளர்கள், விசுவாசிகளின் பாதுகாப்பிற்கு உறுதிவழங்கும் முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

வத்திக்கான் புனித பேதுரு, உரோம் மேரி மேஜர், ஜான் இலாத்தரன், புனித பவுல் ஆகிய நான்கு பெரிய பெருங்கோவில்களும், பாப்பிறை பெருங்கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கோவிட்-19 பரவலால், பொதுவில் திருவழிபாடுகள் நடைபெறுவது நிறுத்தப்பட்டிருந்தவேளை, உரோம் பெருங்கோவில்களில், மே 18, வருகிற திங்கள் முதல், விசுவாசிகளுக்குத் திருப்பலிகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆலயங்களுக்கு வருவோருக்கு காய்ச்சல் இருக்கின்றதா என்று முதலில் பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள், திருவழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று, புரூனி அவர்கள் அறிவித்தார்.

15 May 2020, 15:52