தேடுதல்

திருப்பீடத் தகவல்தொடர்பு துறையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி திருப்பீடத் தகவல்தொடர்பு துறையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி 

இறைவனோடு பகிரும்போது, புது அர்த்தங்கள் பிறக்கின்றன

நம்முடைய நேரத்தையும், திறமைகளையும், பணத்தையும், செபங்களையும் பிறருக்கு கொடையாக வழங்கி, உறவுகளை வளர்க்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தகவல் தொடர்பு என்பது, ஒன்றிப்பிற்குத்தானேயன்றி, பிரிவினைக்கல்ல என்ற கருத்தை வலியுறுத்தி, தகவல் தொடர்பு வாரத்திற்கு தன் செய்தியை வெளியிட்டுள்ளார், திருப்பீடத் தகவல்தொடர்பு துறையின் தலைவர், முனைவர் பவுலோ ருஃபீனி.

புனித பவுல் துறவுசபைகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள சமூகத்தொடர்பு வாரத்தையும், 54வது உலக சமூகத்தொடர்பு நாளையும் ஒட்டி, காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ருஃபீனி அவர்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி, அவைகளை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துரைப்பது பற்றியும், வாழ்வு வரலாறாகிறது, என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், தகவல் தொடர்பு நாள் செய்தி எடுத்துரைத்துள்ளது பற்றியும் தன் காணொளிச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்று நிகழ்வுகளை மற்றவர்களோடு பகிர்வது குறித்துப் பேசும் திருத்தந்தையின் செய்தி, நம் அனுபவங்களை அடுத்தவர்களுக்கு எடுத்துரைப்பதையும், நாம் சந்திப்பவர்களுக்கு செவிமடுக்கவும், அழைப்புவிடுப்பதுடன், இறைவனோடு நாம் பகிரும்போதுதான், புது அர்த்தங்கள் பிறக்கின்றன என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டி நிற்கின்றது என தன் செய்தியில் கூறியுள்ளார் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் ருஃபீனி.

இந்த கொரோனா தொற்று நோய்க்காலத்தில் எழுந்துள்ள துன்ப நிலைகள், நம் வாழ்வு குறித்து நாம் மீண்டும் சிந்திக்க அழைப்புவிடுக்கின்றன எனவும் தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார் ருஃபீனி.

இக்காலத்தில், விலகி நின்று வாழும் அனுபவத்தைக் கண்டுள்ள நாம், ஒன்றிப்பின் அர்த்தத்தை புரிந்துகொண்டுள்ளோம் என்பதையும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ள ருஃபீனி அவர்கள், இறைவனுடன் தொடர்புகொண்டு உரையாடுவதில் இருக்கும் அழகு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் நம் நம்பிக்கையை எதன் அடிப்படையில் கொண்டுள்ளோம் என்பது குறித்து சிந்திக்கவும், இன்முக வரவேற்பு, உடன்பிறந்த நிலை, ஒருமைப்பாடு ஆகியவைகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கவும், சமூகத்தொடர்பு சாதனங்கள் உதவவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ள ருஃபீனி அவர்கள், நம்முடைய நேரத்தையும், திறமைகளையும், பணத்தையும், செபங்களையும் பிறருக்கு கொடையாக வழங்கி, உறவுகளை வளர்க்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் தன் காணொளிச் செய்தியில் முன்வைத்துள்ளார்.

ஒவ்வொருவரிடமும் இருக்கும் அறிவையும், அன்பையும், அதிகப்படியாக இருக்கும் பொருட்களையும் பகிர்வதற்குரிய வழியாக தகவல் தொடர்பை பயன்படுத்த முடியும் என்பதை தன் செய்தியில் கூறும் ருஃபீனி அவர்கள், 'நமக்கு முன் சென்றுள்ளவர்களின் புன்னகையாக நாம் மாறி, அந்தப் புன்னகையை பகிர்வதன் வழியாக, வரலாறு படைக்கமுடியும்' என்ற ஆப்ரிக்க பழமொழி ஒன்றை எடுத்துரைத்து தன் செய்தியை  நிறைவுச் செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2020, 14:24