தேடுதல்

Vatican News
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுடன் கர்தினால் Stanislaw Dziwisz திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுடன் கர்தினால் Stanislaw Dziwisz  (@Vatican_Media)

சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊக்கமளித்த புனித திருத்தந்தை

இறைவன் குறித்தும், மனிதர் குறித்தும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட உண்மையின் வார்த்தைகள், ஐரோப்பாவில் ஆழமான சமூக, மற்றும், அரசியல் மாற்றங்களுக்கு இட்டுச்சென்றதை மறுக்க முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகின் அனைத்து மக்களும், கோவிட்-19 தொற்றுநோயால் துயர்களை அனுபவித்துவரும் இவ்வேளையில், புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வாழ்வும், பணிகளும், நமக்கு நம்பிக்கைகளை வழங்குவதாக உள்ளன என கூறியுள்ளார், போலந்து கர்தினால் Stanislaw Dziwisz.

முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின், தலைமைப் பணிக்காலத்தில் அவரின் செயலராகப் பணியாற்றிய கர்தினால் Dziwisz அவர்கள், அத்திருத்தந்தையின் நூறாவது பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியில், எச்சூழலிலும் நம்பிக்கையிழக்காமல் செயல்பட்ட அப்புனிதத் திருத்தந்தை, இவ்வுலகின் இத்துன்பவேளையிலும் நமக்காகச் செபித்துக் கொண்டிருக்கிறார் என அதில் கூறியுள்ளார்.

இப்புனிதத் திருத்தந்தையின் செப வாழ்வு, பணிகள், திருத்தூதுப்பயணங்கள் உட்பட, அவர் வாழ்வின் பல நிகழ்வுகளுக்கு, தான் நேரடியான ஒரு சாட்சி என்று கூறும் கர்தினால் Dziwisz அவர்கள், இறைவன் குறித்தும், மனிதன் குறித்தும் அத்திருத்தந்தை வெளியிட்ட உண்மையின் வார்த்தைகள், ஐரோப்பாவில் ஆழமான சமூக, மற்றும், அரசியல் மாற்றங்களுக்கு இட்டுச்சென்றதை மறுக்க முடியாது என கூறியுள்ளார்.

கோவிட்-19 உருவாக்கியுள்ள இத்துன்பகரமான வேளையில், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், நம் ஒவ்வொருவரையும் நோக்கி, 'அஞ்சாதீர்கள்' என்ற இயேசுவின் வார்த்தைகளை மீண்டும் எடுத்துரைக்கிறார் என்று, மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் Dziwisz.

மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் எப்போதும் ஊக்கமளித்துவந்த இப்புனிதத் திருத்தந்தை, ஒப்புரவு, மன்னிப்பு, மற்றும், கைம்மாறு கருதாத அன்பை நமக்கு எடுத்தியம்பினார் என்ற கர்தினால், சுயநலங்களால் நாம் தோல்வியடையாமல், உடன்பிறந்த உணர்வுகொண்ட ஒருமைப்பாட்டுடன் வெற்றியடைவோம் எனவும் கூறியுள்ளார்.

இறைவன் மீதும், இறைவனால் மீட்கப்பட்ட மனிதர் மீதும் விசுவாசம் கொண்டிருந்த இத்திருத்தந்தையின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாமும் நம்பிக்கையுடன் வாழ்வில் நடைபோடுவோம் என, தன் செய்தியில் மேலும் கூறியுள்ளார், கர்தினால் Dziwisz.

19 May 2020, 15:11