தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே  

மறைபரப்புப்பணியைக் குறித்து திருத்தந்தையின் தாகமும், தெளிவும்

மறைபரப்புப்பணியானது, மனிதர்களின் திட்டங்களாலும், செயல்பாடுகளாலும் உருவாகும் முயற்சி அல்ல, மாறாக, அது தூய ஆவியாரின் கொடை - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எழுத்து வடிவில் வழங்கியுள்ள செய்தி, மறைபரப்புப்பணியைக் குறித்து அவர் கொண்டிருக்கும் தாகத்தையும், தெளிவையும் உணர்த்துகின்றது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மே 21, கடந்த வியாழன்று, ஆண்டவரின் விண்ணேற்றப்பெருவிழா வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட வேளையில், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதையச் சூழலில், அச்சந்திப்பு நடைபெறாமல் போனதால், தன் எண்ணங்களை ஒரு செய்தியின் வழியே அவர்களுக்கு வழங்கினார்.

திருத்தந்தை வழங்கிய இச்செய்தியைக் குறித்து, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில், மறைபரப்புப்பணியைக் குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மறைபரப்புப்பணியானது, மனிதர்களின் திட்டங்களாலும், செயல்பாடுகளாலும் உருவாகும் முயற்சி அல்ல, மாறாக, அது தூய ஆவியாரின் கொடை என்பதை திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியிருப்பது, திருஅவையின் அனைத்து செயல்பாடுகளும் மனிதத் திறமையால் அல்ல, இறைவனின் அருளால் நடைபெறுகிறது என்பதை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது என்று கர்தினால் தாக்லே அவர்கள் இப்பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

தன் பிம்பத்தை தானே கண்டு மயங்கிய நார்சிசுஸ் என்ற கிரேக்க புராணக் கதைநாயகன் போல, திருஅவை, தன் மறைபரப்புப்பணிகளின் விளைவுகளைக் கண்டு மகிழ்ந்து மயங்கியிராமல், தன்னிறைவு என்ற கண்ணாடியை உடைப்பதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற பாணியில் திருத்தந்தை பேசியிருப்பது, மிக வலிமையான ஓர் உருவகம் என்பதையும், கர்தினால் தாக்லே குறிப்பிட்டுப் பேசினார்.

கோவிட் 19 உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையால், கத்தோலிக்கத் திருஅவை, தன் மறைபரப்புப்பணி என்ற இலக்கை மறந்துவிடக்கூடாது என்பதை, இப்பேட்டியின் இறுதிப்பகுதியில் எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், எதிர்மறையான பல விளைவுகளை உருவாக்கியுள்ள இந்த தொற்றுக்கிருமி காலத்தில், பரிவு, தன்னலமற்ற பணி, குடும்பங்களில் அன்பு, ஆழமான செப அனுபவம், இறைவார்த்தையை காணும் புதிய ஒளி என்ற பல்வேறு கொடைகளை தூய ஆவியார் வழங்கியுள்ளார் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2020, 16:08